சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கு.. 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செல்லுமா?.. இன்று தீர்ப்பு!!
AIADMK MLAs Disqualification Verdict Today: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தகுதிநீக்க மனு நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாவை ஏற்றது சரியா என்ற கோணத்தில் தலைமை நீதிபதி அமர்வு அளிக்கவுள்ள தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அக்.09: தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமா மற்றும் தகுதிநீக்க விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 9) முக்கிய தீர்ப்பை வழங்கவுள்ளது. கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டதாக எழுந்த புகாரில், தகுதிநீக்க நடவடிக்கை சபாநாயகரிடம் நிலுவையில் இருந்த சூழலில், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அளித்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சத்தியபாமா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்த வழக்கின் தீர்ப்பு, இடைத்தேர்தல் களம் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிக்க: தமிழக இடைத்தேர்தல் வரலாறு.. 58% வெற்றியைக் கைப்பற்றிய ஆளுங்கட்சிகள்.. உடைக்கப்படுமா பழைய பிம்பம்?
வழக்கின் பின்னணியும் மனுதாரர்களின் வாதமும்:
கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசை சுப்பையா, பெருந்துறை ஜெயகுமார், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகத் தகுதிநீக்கப் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மனுதாரர்கள் தரப்பில், “கொறடா அளித்த தகுதிநீக்கப் புகார் மீது நோட்டீஸ் அனுப்பாமலும், குதிரைப் பேரம் குறித்த புகார்கள் குறித்து முறையான விசாரணை நடத்தாமலும் சபாநாயகர் அவசர அவசரமாக ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது சட்டவிரோதமானது” என்று வாதிடப்பட்டது.
சபாநாயகர் மற்றும் எதிர்மனுதாரர்களின் பதில் வாதம்:
இந்த வழக்கை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி, சுய விருப்பத்தின் பேரிலேயே கைப்பட எழுதி ராஜினாமா கடிதங்களை அளித்ததால் அதனை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது; உறுப்பினர்களை விருப்பத்திற்கு மாறாகப் பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திப்பது அரசியல் சாசன கடமையிலிருந்து தவறுவதாகும்” என வாதிட்டனர். மேலும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் தரப்பில், “பதவியில் நீடித்துக்கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளிப்பதுதான் தவறே தவிர, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு இயக்கத்தில் இணைவது ஜனநாயக உரிமையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: Tamil Nadu By Election 2026 Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை.. வாகை சூடப்போவது யார்?
இன்று வெளியாகவுள்ள தீர்ப்பின் முக்கியத்துவம்:
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, வழக் கெழுப்பிய சட்டப் பூர்வக் கேள்விகள் மற்றும் சபாநாயகரின் அதிகார வரம்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், இன்று காலையில் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தகுதிநீக்க மனு நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நடைமுறை சரியா, தவறா என்பதற்கு உயர் நீதிமன்றம் அளிக்கவுள்ள விளக்கம், தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய முன்மாதிரியாக அமையும் எனக் கருதப்படுகிறது.