கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறை: ரயில்களில் முன்பதிவு தொடக்கம்
கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை 2025க்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. டிசம்பர் 23, 24, 25 தேதிகளுக்கான டிக்கெட்டுகளை பயணிகள் இன்று/நாளை முன்பதிவு செய்யலாம். தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்று தீர்ந்து வருகிறது. சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு, அக்டோபர் 24: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் ரயில்கள் பேருந்துகள் என அனைத்திலும் முன்பதிவு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு பேருந்துகளில் 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதால் மக்கள் அதனை பயன்படுத்தி தங்களது சொந்த ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் பயணப்பட்டு வருகின்றனர். அதே சமயம் ரயில்களில் நான்கு மாதமாக இருந்த கால அவகாசம் தற்போது இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவானது தொடங்குகிறது.
அதன்படி 2025 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதியான புதன்கிழமை வருகிறது. பெரும்பாலான பள்ளிகள் அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் 23 அல்லது 24 ஆம் தேதி முடிவடையும்படி கால அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த நிலையில் 2025 டிசம்பர் 23ஆம் தேதி சொந்த ஊர் செல்ல நினைப்பவர்கள் இன்று (அக்டோபர் 24) முன்பதிவு செய்யலாம்.
Also Read: இனி ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு போக முடியாது.. வரும் புது ரூல்ஸ்!




அதே போல் டிசம்பர் 24 ஆம் தேதி செல்ல நினைப்பவர்கள் நாளை (அக்டோபர் 25) முன்பதிவு செய்து கொள்ளலாம். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) அன்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிசம்பர் 22ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு நேற்று (அக்டோபர் 23) காலை 8 மணிக்கு தொடங்கியது. ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில்வே முன்பதிவு மையங்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவு நடைபெற்ற நிலையில் சிறிது நேரத்திலேயே பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் முடிவு பெறும் நிலைக்கு வந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என்பதால் பெரும்பாலான மக்கள் நினைவில் வைக்க தவறி விடுவதாக பலரும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நடுவில் ஏதேனும் ஒரு மாதத்தில் 31ம் தேதி வந்தால் குளறுபடி ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் கடைசி நேர அவசரத்தை தவிர்க்கும் பொருட்டு ஆம்னி பிறந்த களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கிறிஸ்துமஸ், 2026 ஆங்கில புத்தாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை ஆகியவை வருவதால சிறப்பு ரயில்களும் தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.