IRCTC: இனி ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு போக முடியாது.. வரும் புது ரூல்ஸ்!
இந்திய ரயில்வே, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் பொருட்டு புதிய பொருட்கள் எடை வரம்பு விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. விமான நிலையங்களைப் போல, ரயில் நிலையங்களிலும் எடை அளவிடும் இயந்திரங்கள் பொருத்தப்படும். குறிப்பிட்ட எடை வரை இலவசமாகவும், அதற்கு மேல் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்திய ரயில்வே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மிகப்பெரிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பயணிகள் வசதிக்கேற்க பாசஞ்சர் ரயில் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரை என பல்வேறு கட்டண அடிப்படையில் பல்வேறு வகுப்புகள் இடம்பெறும் வண்ணம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். இப்படியான நிலையில் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த அவ்வப்போது இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட ஆதார் இணைக்கப்பட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக வரப்போகும் மாற்றம்
பொதுவாக ரயிலில் பயணிப்பவர்களால் அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்ல முடியாது. சில நேரங்கள் மற்ற பயணிகளின் சிரமங்களை கணக்கில் கொள்ளாமல் சிலர் அளவுக்கதிகமாகவும், அதிக எடை கொண்ட பொருட்களையும் கொண்டு வருவார்கள். இதனால் பயணிப்பவர்களின் மனநிலை வெறுப்பை சம்பாதிக்கும் அளவுக்கு சென்று விடும். இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தவிர்க்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொதுவாக விமான நிலையங்களில் பயணிகள் உடமைகளை எடுத்துச் செல்ல குறிப்பிட்ட கிலோ என்ற கணக்கில் இலவசமாகவும், அதற்கு மேல் என்றால் எக்ஸ்ட்ரா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அப்படியான நடைமுறை ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இனிமேல் கவலையில்லை
அந்த வகையில் முக்கிய ரயில் நிலையங்களிலும் பொருட்களை எடைபோடும் பணி நடைபெறும் எனவும், பயணிகள் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக எடுத்துச் சென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பிரிவில் உள்ள பிரயாக்ராஜ் சந்திப்பு, பிரயாக்ராஜ் சியோகி, சுபேதர்கஞ்ச், கான்பூர் சென்ட்ரல், மிர்சாபூர், துண்ட்லா, அலிகார் சந்திப்பு, கோவிந்த்புரி மற்றும் எட்டாவா நிலையங்களில் இதனை மேற்கொள்ள வட மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
Also Read: இந்தியாவில் அதிவேகமாக இயக்கப்படும் ரயில்கள் என்னென்ன தெரியுமா?
இதற்காக மின்னணு எடை இயந்திரங்கள் ரயில் நிலையங்களில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் ரயில் நிலைய நடைமேடைக்குள் நுழையும் முன்பே இந்த முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் வகுப்பு ஏசிக்கு 70 கிலோ வரையும், இரண்டாம் வகுப்பு ஏசிக்கு 50 கிலோ வரையும், மூன்றாம் வகுப்பு ஏசிக்கு 40 கிலோ வரையும், சாதாரண படுக்கை வகுப்புக்கு 40 கிலோ வரையும், பொது/இரண்டாம் இருக்கை பிரிவுக்கு 35 கிலோ வரையும் பொருட்களை கொண்டு செல்லலாம். கூடுதல் கட்டணமாக எடையில் இருந்து ஒன்றரை மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.