ரயில் டிக்கெட்டில் முன்பதிவில் 20% சலுகை.. IRCTC அட்டகாசமான அறிவிப்பு.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
IRCTC Diwali Offer | தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால், பயணர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஐஆர்சிடிசி அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிக்கைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொதுமக்களுக்கு 20% வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பயண டிக்கெட்டில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கும் சிறப்பு திட்டத்தை ஐஆர்சிடிசி (IRCTC – Indian Railway Catering and Tourism Corporation) அறிமுகம் செய்துள்ளது. இந்த அசத்தல் அம்சத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி, அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தீபாவளி சிறப்பு சலுகை – ரயில் டிக்கெட்டில் 20 சதவீதம் வரை தள்ளுபடி
இந்த சலுகையில் பயன்பெற பயணிகள் தங்களது பயணத்தை அக்டோபர் 13, 2025 முதல் அக்டோபர் 26, 2025 வரை உள்ள தேதிகளில் முன்பதிவு செய்ய வேண்டும். இதேபோல நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 1, 2025 வரை திரும்பும் பயணத்தை முன்பதிவு செய்யலாம். இந்த சலுகையை பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வழக்கமான 60 நாட்கள் முன்பதிவு விதிகள் இதற்கு பொருந்தாது. இதன் காரணமாக இந்த சிறப்பு சலுகையின் மூலம் பயணம் செய்ய விரும்பும் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது பயணத்தை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க : வாகனத்தின் ஆர்சி தொலைந்து விட்டதா? நகலைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?




முன்பதிவு செய்ய கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்
இந்த தீபாவளி சிறப்பு சலுகையை பொருத்தவரை திரும்பும் பயண கட்டணத்தில் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும். இதுதவிரே ஒரே வகுப்பில், இருவழி பயணத்தை உறுதி செய்த டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் தேதி மாற்றம் செய்வது, பணம் திரும்பபெறுதல், வவுச்சர், கூப்பன் மற்றும் பாஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்த முடியாது. தீபாவளி சலுகையை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால், அதனை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க : உங்கள் பழைய காரை விற்கப் போகிறீர்களா? இந்த ஆவணங்கள் தேவை!
சிறப்பு சலுகை – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
இந்த தீபாவளி சிறப்பு ரயில் சலுகை, சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும். இந்த சலுகையை பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் ஆன்லைன் அல்லது ரயில் டிக்கெட் முன்பதிவு அலுவலகங்கள் மூலம் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த சலுகையை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்வதற்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 14, 2025) முதல் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.