Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் பயணம் திருப்திகரமாக இல்லையா? கட்டணத்தை திரும்ப பெறலாம் – எப்படி தெரியுமா?

IRCTC TDR Filing Explained : ரயில் தாமதம் ஏற்பட்டாலோ, ஏசி பழுதடைதல் போன்ற காரணங்களால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலோ உங்கள் டிக்கெட் கட்டணத்திற்கான பணத்தை திரும்ப பெறலாம். இதற்கான வாய்ப்பை ஐஆர்சிடிசி உங்களுக்கு வழங்குகிறது. அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரயில் பயணம் திருப்திகரமாக இல்லையா? கட்டணத்தை திரும்ப பெறலாம் – எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 01 Jul 2025 17:33 PM

இந்திய ரயில்வே (Indian Railways) மூலம் பயணம் செய்யும்போது, தாமதம், ஏசி வேலை செய்யாத நிலை, பாதை மாற்றம், வண்டி ரத்து ஆகியவற்றால் நீங்கள் பயணத்தில் நிம்மதியற்ற அனுபவம் பெற்றிருந்தீர்களா?  இனி  அதற்கு கவலைப்படத் தேவையில்லை. இப்போது ஐஆர்சிடிசி (IRCTC) வழங்கும் புதிய வசதியின் மூலம், நீங்கள் கட்டணமாக செலுத்திய பணத்தை திரும்பப் பெற முடியும். இதற்காக ஐஆர்சிடிசி  டிக்கெட் டெபாசிட் ரிசிப்ட் (Ticket Deposit Receipt)  எனப்படும் முறையின் மூலம் பயணிகள், தங்கள் பயணத்தை ரத்து செய்ததற்கோ, சரி வர பயணிக்க முடியாமல் மோசமான அனுபவம் பெற்றிருந்தாலோ பணம் திரும்ப பெறும் வாய்ப்பை வழங்குகிறது.

டிக்கெட் டெபாசிட் ரிசிப்ட் என்றால் என்ன?

டிடிஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் டிக்கெட் டெபாசிட் என்பது, பயணிகள் தங்கள் பயணிகள் தங்கள் ரயில் பயணம் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க பயன்படும் முறையாகும். இந்த வசதி ஐஆர்டிசி இணையதளம் அல்லது மொபைல் செயலியின் வாயிலாக பெற முடியும். குறிப்பாக மோசமான பராமரிப்பு காரணமாக ரயிலில் பயணிக்க முடியாத நிலை, ரயில் தாமதம், பாதை மாற்றம், அல்லது வண்டி மாற்றம் போன்ற காரணங்களால் உங்கள் பயணங்களில் தடங்கல் ஏற்பட்டால் இந்த முறையில் விண்ணப்பித்து உங்கள் டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரும்ப பெறலாம்.

டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவது தொடர்பாக ஐஆர்சிடிசியின் எக்ஸ் பதிவு

 

டிக்கெட் டெபாசிட் ரிசிப்ட்டை எப்படி தாக்கல் செய்வது?

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஐஆர்சிடிசி ஆப் மூலமாகாக டிடிஆர் தாக்கல் செய்யலாம். அதற்கு செய்ய வேண்டியவை,

  1. www.irctc.co.in இணையதளம் அல்லது ஐஆர்சிடிசி செயலியில் உள்நுழையுங்கள்

  2. My Account பகுதியில் சென்று My Transactions என்பதைத் தேர்வுசெய்யவும்

  3. அங்கே File TDR என்பதை கிளிக் செய்யவும்

  4. உங்கள் PNR எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்

  5. பின்னர் கிடைக்கும் பட்டியலில் இருந்து காரணத்தை தேர்வு செய்யவும்

  6. பயணிகள் எண்ணிக்கையை தேர்ந்தெடுத்து ‘File TDR’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்

  7. அறிவுறுத்தல்களைப் படித்து ‘Yes’ என்பதைத் தேர்வு செய்து உறுதிப்படுத்தவும்

உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டதாகவும், திரும்பப் பெறும் செயல்முறை தொடங்கப்பட்டதாகவும், ஒரு தகவல் தோன்றும்.

தாக்கல் செய்வதற்கான முக்கிய விதிகள் மற்றும் கால வரம்புகள்

  • டிக்கெட் டெபாசிட் ரிசிப்ட் தாக்கல் செய்யும் போது, ஒவ்வொரு காரணத்திற்கும் தனி கால வரம்பு உள்ளது. அவற்றை மீறினால், பணம் திரும்ப பெற முடியாது.
  • ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தாலோ அல்லது ரயிலில் பயணிக்கவில்லை என்றாலோ, ரயில் புறப்படுவதற்குள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஏசி இயங்கவில்லை என்றால் பயணம் முடிந்து 20 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பாதையில் இருந்து ரயில் மாற்று பாதையில் சென்றால் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • வெயிட்டிங் லிஸ்டில் இருந்து நீங்கள் பயணிக்கவில்லை என்றால் 72 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ரயில் சேதம் ஏற்பட்டு பயணிக்க முடியாத நிலையில் இருந்தால் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து 3 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ரயில் நீங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இருந்து முன் கூட்டியே நிறுத்தப்பட்டால்  பயணம் முடிவதற்கான திட்டமிடப்பட்ட நேரத்தில் இருந்து 72 மணி நேரத்தில் விண்ணப்பிக்கலாம்.

டிக்கெட் டெபாசிட் ரிசீப்ட் மூலம் விண்ணப்பித்த பிறகு உங்கள் புகார் குறித்து ஐஆர்சிடிசி விசாரித்த பிறகு உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யும். உங்கள் புகார் சரியானது என்றால் பணம் உங்கள் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும்.