தமிழகத்தில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..
12th std public exams begins today: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பான வெற்றி பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும், பதற்றமின்றியும் தேர்வை அணுக வேண்டும் என்றும் மாணவர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, மார்ச் 02: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்நாளான இன்று தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8,27,475 பேர் எழுதுகின்றனர். இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனினும், கடந்த ஆண்டுகளில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நாளை (மார்ச் 3) தேர்வு நடைபெற உள்ளது.
இதையும் படிக்க : முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!
4,540 பறக்கும் படைகள் அமைப்பு:
பொதுத் தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர்,இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும்:
தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள்கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்புக் குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வெழுத நிரந்தர தடை:
ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்றும் 94983 83075, 94983 83076 எண்களை தொடர்புகொள்ளலாம்.
சென்னையில் தேர்வெழுதும் 64,359 தேர்வர்கள்:
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 578 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 30,663 மாணவர்கள், 33,696 மாணவிகள் என மொத்தம் 64,359 மாணவர்களும் மற்றும் 3,157 தனித் தேர்வர்கள் 250 தேர்வு மையங்களிலும் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகளுக்காக 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 5 விடைத்தாள் சேகரிக்கும் மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து:
நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன்…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 1, 2026
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும், பதற்றமின்றியும் தேர்வை அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டில் மாணவச் செல்வங்களுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு இன்று முதலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 11ம் தேதி முதலும் தொடங்க இருக்கிறது. மேல்நிலைத் தேர்வை 7,99,692 மாணவ மாணவியரும், பத்தாம் வகுப்புத் தேர்வை 8,82,806 மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர்.
உயர்கல்வியே எங்கள் இலக்கு என்னும் உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து உங்கள் குறிக்கோளின் நுழைவு வாயிலான மேல்நிலை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய்ப் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது. “என்னால் முடியும்” என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவையில்லை. தேர்வுகளை முனைப்புடனும், முழு கவனத்துடனும் எழுதுங்கள்.
இதையும் படிக்க : “ஓபிஎஸ்-ஐ தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”.. பியூஸ் கோயல் சரமாரி தாக்கு..
அன்புக் குழந்தைகளே! மனவலிமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் உங்கள் வெற்றிப்பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்கள் உயர்வு தமிழ்நாட்டின் வளர்ச்சி. தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.