Team India: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுமா..? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள்!
World Test Championship Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) விதிமுறைகளின்படி, பைனலுக்கு தகுதிபெற அணிகள் குறைந்தபட்சம் 60 முதல் 65 சதவீதப் புள்ளிகளை (PCT) பெற்றிருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 முக்கிய வழிகள் உள்ளன.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 பைனலுக்கு எந்த அணி செல்லும் என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர்ச்சியாக 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி , இம்முறை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் WTC பைனலுக்கு செல்ல கடினமான ஒரு பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போதைய புள்ளிப் பட்டியலில் பெரும் பின்னடைவில் உள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு, ஒவ்வொரு அடுத்த போட்டியும் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற நிலையிலேயே உள்ளது. அப்படியென்றால், இந்திய அணி (Indian Cricket Team) இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான கணக்கீடுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: நைட் க்ளப் பிரச்சனை.. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்ட ஸ்டோக்ஸ்..!
இந்திய அணியின் எதிர்கால சவால்கள்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி மொத்தம் 18 போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் 9 போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள 9 போட்டிகளே இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.




- இலங்கை சுற்றுப்பயணம் (வெளிநாட்டுத் தொடர்): 2 டெஸ்ட் போட்டிகள்.
- நியூசிலாந்து சுற்றுப்பயணம் (வெளிநாட்டுத் தொடர்): 2 டெஸ்ட் போட்டிகள்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான (சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்): 5 டெஸ்ட் போட்டிகள்.
இந்திய அணி கணக்கீடு:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) விதிமுறைகளின்படி, பைனலுக்கு தகுதிபெற அணிகள் குறைந்தபட்சம் 60 முதல் 65 சதவீதப் புள்ளிகளை (PCT) பெற்றிருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு 2 முக்கிய வழிகள் உள்ளன:
- மீதமுள்ள 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று, 68.52 சதவீதப் புள்ளிகளைப் பெற வேண்டும்.
- 6 வெற்றிகள் மற்றும் 2 சமன்கள் மூலம் 62.96 சதவீதப் புள்ளிகளைப் பெற வேண்டும்.
இனிவரும் நாட்களில் நடைபெறும் 9 போட்டிகளில் 8-ல் இந்திய அணி வெற்றி பெற்றால், அது நிச்சயமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். அவர்கள் 7 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதியாகும். இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியை சமன் செய்தாலும், இறுதிப் போட்டிக்குச் செல்ல அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும்.
ALSO READ: காத்திருக்கும் 37 ஆண்டுகால சாதனை.. முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!
இந்திய அணி தோற்றால் என்னவாகும்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க வேண்டும். அடுத்த தொடரில் இந்தியா ஓரிரு போட்டிகளில் தோற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்களின் அடுத்த போட்டிகளில் தோற்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் இறுதிப் போட்டிப் பந்தயத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைக்கும்.
அதனால்தான் வரவிருக்கும் 9 டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவை. இந்த முக்கியமான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பைனலுக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.