Team India: நீக்கப்பட்ட பிறகு முதல் முறை.. பொதுவெளியில் மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்!
Suryakumar Yadav: இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 கேப்டன்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவின் சர்வதேச டி20 கேப்டன்சி சாதனை, இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஒன்றாகும். அவரது கேப்டன்சியின் கீழ், இந்தியா மொத்தம் 52 டி20 போட்டிகளில் விளையாடியது. அவற்றில், இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்று, வெறும் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது.
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய பிறகு, கேப்டன் பதவியை இழந்து அணியிலிருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், கேப்டன்ஷி மற்றும் அணியில் இருந்து நீக்கியது தொடர்பாகவும் முதல் முறையாக பொதுவெளியில் பேசினார். அதில், தேர்வுக் குழுவுடனான தனது தொலைபேசி உரையாடல், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இந்திய அணியிலிருந்து (Indian Cricket Team) நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வலி ஆகியவை குறித்து ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) விரிவாகப் பேசியுள்ளார். மேலும், தனது தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ், போட்டி முடிந்த உடனேயே தனது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
ALSO READ: சஞ்சு இல்லையெனில் உலகக் கோப்பையே இல்லை.. புகழ்ந்து தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
ஜூலை 2024-ல் டி20 அணியின் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் தலைமையின் கீழ், இந்தியா தோல்வியின்றி தொடரை வென்றது மட்டுமல்லாமல், 2025 ஆசியக் கோப்பை மற்றும் மார்ச் 8, 2026 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் வென்றது. இத்தகைய சிறப்பான செயல்திறன் இருந்தபோதிலும், தேர்வாளர்கள் மோசமான ஃபார்ம் காரணமாக சூர்யகுமாரை அணியிலிருந்து நீக்கி, ஷ்ரேயாஸ் ஐயரை புதிய டி20 கேப்டனாக நியமித்தனர்.




சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் நடந்த ஒரு உரையாடலின் போது, சூர்யகுமார் யாதவ் தனது மனவேதனையை வெளிப்படுத்தினார். சூர்யா கூறியதாவது, “இது எப்படி நடந்தது என்று சுமார் ஒன்றரை மாதங்களாக நான் வீட்டில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை வரை நான் இந்திய அணிக்குத் தலைமை தாங்குவேன் என்று நம்பியிருந்தேன். அணித் தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பிசிசி தேர்வுக் குழுவினர் தொலைபேசியில் என்னிடம் பேசி, எதிர்காலத்திற்காக ஒரு புதிய அணியை உருவாக்கும் நேரம் வந்துவிட்டதால், இங்கிலாந்து தொடருக்கு தனது பெயர் தேர்ந்தெடுக்கப்படாது என்று தெளிவாகக் கூறினர்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய சூர்யகுமார் யாதவ், ” இந்திய அணியில் என் பெயர் இல்லாதபோது நான் சிரித்தேன். போட்டியின் போது அழுத்தமான சூழல் ஏற்படும்போதெல்லாம், நான் எப்போதும் என்னை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சிப்பேன். இப்படி ஒன்று நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அது என் தவறல்ல என்பதால், நான் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. எடுக்கப்பட்ட இந்த முடிவு நிச்சயமாக அணியின் நன்மைக்காகவே இருக்கும். நீங்கள் முடிவை எடுத்து என்னிடம் சொல்லிவிட்டீர்கள், அதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் தொடர்ந்து விளையாடுவேன், உங்களுக்குச் சரியான நேரம் என்று தோன்றும்போதெல்லாம், என்னை மீண்டும் அணிக்கு அழையுங்கள்” என்று கூறினார்.
ALSO READ: ஜப்பானில் வசதி குறைவு.. அனுபவ வீரர்களை அனுப்ப யோசிக்கும் பிசிசிஐ!
டி20யில் வெற்றிகரமான கேப்டன்:
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 கேப்டன்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவின் சர்வதேச டி20 கேப்டன்சி சாதனை, இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஒன்றாகும். அவரது கேப்டன்சியின் கீழ், இந்தியா மொத்தம் 52 டி20 போட்டிகளில் விளையாடியது. அவற்றில், இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்று, வெறும் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது. அதாவது, அவரது வெற்றி சதவீதம் 80.76% ஆகும். கேப்டன் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் திடீரென விலகிய போதிலும், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு சூர்யகுமார் நன்றி தெரிவித்தார்.