Cricket Australia: சாண்ட்பேப்பர் சர்ச்சை.. பேட் கம்மின்ஸ் கேப்டன் பதவி ஆபத்து..?
Sandpapergate: உஸ்மான் கவாஜாவின் சுயசரிதையால் 'சாண்ட்பேப்பர்கேட்' சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. இதில் முழு ஆஸ்திரேலிய அணியும் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டதால், தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ் மீது கேள்விகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா கம்மின்ஸுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது கேப்டன் பதவி பாதுகாப்பானது என அறிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டின் ‘சாண்ட்பேப்பர்கேட்’ விஷயம், கிரிக்கெட்டில் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார். தனது ‘சப்ர்’ என்ற சுயசரிதையில், தற்போதைய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) உட்பட முழு ஆஸ்திரேலிய அணியும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாக உஸ்மான் கவாஜா வெளிப்படுத்தியுள்ளார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் (Australia Cricket Team) பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கம்மின்ஸ் முன்வந்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனால், கம்மின்ஸின் கேப்டன் பதவி ஆபத்தில் உள்ளதாக செய்திகள் பரவியது. தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
ALSO READ: பவுன்சரால் கேமரூன் கிரீனுக்கு காயம்.. களத்தில் கொட்டிய ரத்தம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியது என்ன..?
தொடர்ந்து நடைபெற்று வரும் ‘சாண்ட்பேப்பர்கேட்’ சர்ச்சைக்கு மத்தியில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் டேவிட் பூன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் ஆகியோர் நேற்று அதாவது 2026 நவம்பர் 20ம் தேதி சிட்னியில் பேட் கம்மின்ஸைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் டேவிட் பூன், “இந்த மிகவும் கடினமான காலகட்டத்தில், அனைவரின் கருத்துக்களையும் கேட்டு, அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். இதை மனதில் கொண்டு, இந்த வாரம் ஒரு சுதந்திரமான மன்றத்தை நாங்கள் அறிவித்துள்ளோம் . அனைத்து வீரர்களும் மற்றும் துணைப் பணியாளர்களும் இதில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாரியம் ஊக்குவிக்கிறது. அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நாங்கள் விரைவில் வெளியிடுவோம். பேட் கம்மின்ஸுக்கு நாங்கள் எங்கள் ஆதரவைத் தெரிவிப்பதோடு, 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் கவலையை வெளிப்படுத்துகிறோம்.




பேட் கம்மின்ஸின் நேர்மை அல்லது நம்பகத்தன்மை சமரசம் செய்யப்பட்டுள்ளது என்ற எந்தவொரு குற்றச்சாட்டையும் நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்,” என்று கூறினார்.
ALSO READ: ஆஸ்திரேலிய ஆலோசகராக மைக்கெல் ஹஸ்ஸி.. 2027 உலகக் கோப்பைக்காக முக்கிய பொறுப்பு!
பேட் கம்மின்ஸ் நம்பிக்கை:
டேவிட் பூன் மற்றும் டாட் கிரீன்பெர்க் ஆகியோரைச் சந்தித்த பிறகு வெளியிட்ட அறிக்கையில், பேட் கம்மின்ஸ் கூறியதாவது, “அவர்களுடன் பேசுவது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு, அதை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதில்லை, இனியும் எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவது டேவிட் மற்றும் டாட் இருவருக்கும் மிகவும் கடினமான பணியாகும்.
2018 சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த என்னையும், பல வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களையும் தொடர்பு கொண்டதற்காக நான் அவர்களைப் பாராட்டுகிறேன். இந்த மன்றத்தை நான் 100% ஆதரிக்கிறேன், மேலும் நான் இதில் கலந்துகொள்வேன். நான் பேசிய அனைத்து வீரர்களும் பணியாளர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க ஆர்வமாக உள்ளனர். பல கடினமான உரையாடல்கள் இருக்கும், ஆனால் தற்போதைக்கு இதுதான் அவசியம். அதைத் தாண்டி, பெர்த்தில் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்குவதில் எனது முழு கவனமும் இருக்கும், அதுவும் எனது பொறுப்புதான்.” என்று தெரிவித்தார்.