IND vs NZ: 98 ரன்களில் அவுட்டான கில்.. சதமடித்து சவால்விட்ட கே.எல்.ராகுல்.. 486 ரன்கள் குவித்த இந்தியா!
IND vs NZ 1st Test Day 3: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 486 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் 136 ரன்களுடனும், கில் 98 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 486 ரன்கள் குவித்தது. இதன்மூலம், இந்திய அணியின் ஒட்டுமொத்த முன்னிலை 118 ரன்களாக அதிகரித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் (KL Rahul) 136 ரன்களுடனும், கில் 98 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
சுப்மன் கில் தனது 12வது டெஸ்ட் சதத்தை எட்டுவதற்கு 2 ரன்கள் மட்டுமே இருந்தது. இருப்பினும், டஃபி பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். அவருடன் தற்போது களத்தில் இருக்கும் ரிஷப் பண்ட், அன்றைய நாளின் இறுதி ஓவர்களில் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை கடந்தார்.
ALSO READ: SENA நாடுகளில் தொடக்க வீரராக அதிக அரைசதம்.. காம்பீரை முந்திய ஜெய்ஸ்வால்..!




மூன்றாம் நாளில், இந்திய அணி தங்களது 159/1 என்ற ஸ்கோரை மேலும் அதிகரித்தது. தேவ்தத் படிக்கலும் கே.எல். ராகுலும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தேவ்தத் படிக்கல் 80 ரன்கள் எடுக்க, கே.எல். ராகுல் 136 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடந்த 50 ஆண்டுகளில், நியூசிலாந்தில் தனது டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ராகுல் பெற்றார்.
2 ரன்களில் சதத்தை தவறவிட்ட கேப்டன் கில்:
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்களிலேயே அதிக ரன்களைக் கொடுத்தவர் ஜேக்கப் டஃபிதான். இருப்பினும், கேப்டன் டாம் லேதம் அன்றைய போட்டியின் கடைசி ஓவரை அவரிடம் ஒப்படைத்தார். டஃபி ஏமாற்றத்தை கொடுக்காமல் கடைசி ஓவரில் கில்லை 98 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த இந்திய கேப்டன்களின் பட்டியலில் கில்லும் இணைகிறார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு முறை பதற்றமான 90 ரன்களை எடுத்ததன் மூலம், அதிக முறை அந்த நிலையைச் சந்தித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றுள்ளார்.
இந்திய அணியின் சாதனை:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானம், SENA நாடு ஒன்றில் நடைபெறும் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் தலா 50 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரு அரிய சாதனையைக் கண்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விரேந்தர் சேவாக் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றிருந்தாலும், SENA நாடுகளில் முதல் நான்கு இடங்களில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒரே இன்னிங்ஸில் 50+ ரன்கள் எடுத்த நிகழ்வு இதுவரை நடந்ததில்லை.
ALSO READ: நியூசிலாந்தில் முதல் டெஸ்ட் சதம்.. இந்திய ஜாம்பவான்கள் வரிசையில் கே.எல். ராகுல்!
மேலும், ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் எதிரணி 360 ரன்களுக்கு மேல் எடுத்து, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அந்த இலக்கைக் கடப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். தற்போது, இந்திய அணி அத்தகைய ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், 1930 (ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து) மற்றும் 2012 (தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து) ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் மூன்றாவது அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.