Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCB’s IPL Finals History: ஐபிஎல்லில் 3 முறை இறுதிப்போட்டி! அனைத்திலும் தோல்வி.. ஆர்சிபியின் பைனல் வரலாறு..!

Royal Challengers Bengaluru IPL Finals History: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2009, 2011, 2016 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஒரு முறையும் கோப்பையை வெல்லவில்லை. இந்தக் கட்டுரை, பெங்களூரு அணியின் முந்தைய இறுதிப்போட்டி ஆட்டங்களின் சுருக்கமான விவரங்களையும், அந்த ஆட்டங்களில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளையும் விளக்குகிறது. 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ், 2011ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2016ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வியடைந்தது.

RCB’s IPL Finals History: ஐபிஎல்லில் 3 முறை இறுதிப்போட்டி! அனைத்திலும் தோல்வி.. ஆர்சிபியின் பைனல் வரலாறு..!
ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் சொதப்பிய ஆர்சிபிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2025 17:32 PM

இந்தியன் பிரீமியர் லீக் 2025ன் (Indian Premier League) குவாலிபையர் 1ல் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு, கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆகிய 3 ஐபிஎல் சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இருப்பினும், பெங்களூரு அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முந்தைய ஐபிஎல் பைனல்கள் எப்படி இருந்தது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

2009 – டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக தோல்வி:

ஐபிஎல் ஆரம்பித்த 2வது ஆண்டிலேயே கோப்பையை தட்டி பறிக்கும் வாய்ப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தவறவிட்டது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே 4/16 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். டெக்கான் அணியின் ஹெர்ஷல் கிப்ஸ் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரோலோஃப் வான் டெர் மெர்வே 32 ரன்களும், ராஸ் டெய்லர் 27 ரன்களும் எடுத்திருந்தனர்.

2011 – சென்னைக்கு எதிராக தோல்வி:

2011ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி 63 ரன்களும், முரளி விஜய் 95 ரன்கள் எடுத்து 159 ரன்கள் என்ற சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் சிக்கியது. இறுதியாக பெங்களூரு அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்களும், விராட் கோலி 35 ரன்களும் எடுத்திருந்தனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

2016- ஹைதராபாத் எதிராக தோல்வி:

2016 ஐபிஎல் சீசன் விராட் கோலி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த சீசனில் அவர் மொத்தமாக 973 ரன்கள் எடுத்திருந்தார். 2016 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.

முதலில் பேட்டிங் செய்யும்போது 38 பந்துகளில் 68 ரன்களும், பென் கட்டிங்கின் அதிரடியான 15 பந்துகளில் 39 ரன்களும், ஹைதராபாத் அணிக்கு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை பெற்று தந்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் கெய்ல் 76 ரன்களும், கோலி 54 ரன்கள் எடுத்திருந்த போதிலும், பெங்களூரு அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 3வது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கோப்பை பறிபோனது.