Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup Finals: 2007 முதல் 2024 வரை.. ஒவ்வொரு அணியும் டி20 உலகக் கோப்பையை வென்றது எப்படி?

All T20 WC Final Match Highlights: 2007 டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் கோப்பையை வென்றது.

T20 World Cup Finals: 2007 முதல் 2024 வரை.. ஒவ்வொரு அணியும் டி20 உலகக் கோப்பையை வென்றது எப்படி?
உலகக் கோப்பையை வென்ற அணிகளின் விவரம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Feb 2026 10:00 AM IST

டி20 உலகக் கோப்பை (T20 World Cup) 2007ம் ஆண்டு தொடங்கி இதுவரை 2024ம் ஆண்டு வரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி, இதுவரை 8 பதிப்புகள் விளையாடப்பட்டுள்ளன. இதில், முதல் முறையாக எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசியாக நடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியே (Indian Cricket Team) சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. அதேநேரத்தில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு முறை பட்டத்தை வென்றுள்ளன.

2007 டி20 உலகக் கோப்பை பைனல்:

2007 டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் கோப்பையை வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கவுதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் எடுக்க, இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 157/5 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணிக்காக மிஸ்பா-உல்-ஹக் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் மிகவும் வெற்றிக்கரமான கேப்டன் யார்? முதலிடத்தை மிஸ் செய்த தோனி, ரோஹித்!

2009 டி20 உலகக் கோப்பை பைனல்:

2009 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது முறையாக எட்டியது. கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வெல்லும் தங்கள் கனவை இறுதியாக நனவாக்கியது.

வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குமார் சங்கக்காரா ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். பதிலுக்குப் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. ஷாஹித் அப்ரிடி 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2010 டி20 உலகக் கோப்பை பைனல்:

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 18 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3வது டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. 2010ம் ஆண்டு மே 16 அன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் ஹஸ்ஸி அணிக்காக 59 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 147/6 ரன்கள் எடுக்க உதவினார்.

பதிலுக்கு இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்காக கிரெய்க் கீஸ்வெட்டர் 63 ரன்களும், கெவின் பீட்டர்சனும் 47 ரன்களும் எடுத்திருந்தனர்.

2012 டி20 உலகக் கோப்பை பைனல்:

இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி 2012ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியை நடத்தும் இலங்கையை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மார்லன் சாமுவேல்ஸ் 78 ரன்கள் எடுத்து அணியை 137/6 என்ற இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இலங்கை அணிக்காக அஜந்தா மெண்டிஸ் 4 ஓவர்கள் வீசி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 138 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி 61 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2014 டி20 உலகக் கோப்பை பைனல்:

இந்தியா இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது .அதேநேரத்தில், 3வது இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை அணி தனது முதல் பட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாக்காவில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி 58 பந்துகளைச் சந்தித்து 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்தார். 131 என்ற எளிய இலக்கை துரத்திச் சென்ற இலங்கை 17.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. குமார் சங்கக்கார இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இலங்கை அணிக்கு வென்று கொடுத்தார்.

2016 டி20 உலகக் கோப்பை பைனல்:

இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பை 2016 இறுதிப் போட்டியானது 2026ம் ஆண்டு ஏப்ரல் 3 அன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில், ஜோ ரூட்டின் அரை சதத்தால் இங்கிலாந்து 155/9 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், டுவைன் பிராவோ மற்றும் கிரெய்க் பிராத்வைட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த சவாலான இலக்கை இன்னும் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டியது. இந்த பைனலின் மார்லன் சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டாவது பட்டத்தைப் பெற்றுத் தந்தார்.

2021 டி20 உலகக் கோப்பை பைனல்:

கொரோனா தொற்றுநோய் காரணமாக, உலகக் கோப்பை 2021 இல் நடைபெற்றது. 2021 நவம்பர் 14ம் தேதி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதின. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 வடிவத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது . துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்காக 48 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.

பதிலுக்கு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 77 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் சேர்த்தனர்.

2022 டி20 உலகக் கோப்பை பைனல்:

2022 நவம்பர் 13 அன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஷான் மசூத் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

பதிலுக்கு, பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத 52 ரன்களுக்கு ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து பட்டத்தை வென்றது.

ALSO READ: அதிரடியாக தொடங்கும் டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?

2024 டி20 உலகக் கோப்பை பைனல்:

பார்படோஸில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிப் போட்டியில் மோதியது. இதில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, விராட் கோலியின் 76 ரன்களால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியை விளையாடும் தென்னாப்பிரிக்க அணியால் 169/8 என்ற கணக்கில் ஸ்கோரைத் தாண்ட முடியவில்லை. இதன் காரணமாக, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.