IndvsNz: நியூசிலாந்து அணியில் தமிழக வீரர்… கையில் ரஜினி டாட்டூ.. யார் இந்த ஆதித்யா அசோக்?
Indian Origin Cricketer : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா அசோக் நீயூசிலாந்து சார்பில் களமிறங்குகிறார். அவர் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நியூசிலாந்து (New Zealand) கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தற்போது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 23 வயதான இந்த இளம் சுழற்பந்து வீச்சாளர், இந்திய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீச தயாராக உள்ளார். வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் ஆதித்யா அஷோக் நியூசிலாந்து அணியின் முக்கிய ஸ்பின்னராக களமிறங்குகிறார். போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.




இதையடுத்து முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரியுடன் உரையாடிய நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், அணியில் ஆதித்யா அஷோக் முன்னணி ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக ஆதித்யா அஷோக் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். இந்த மூன்று போட்டிகளில் அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்த வகையில் இவர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
இதையும் படிக்க : கடைசி ஓவரில் 6 ரன்கள்.. மெய்டன் ஓவரை வீசி அசத்திய சிஎஸ்கே வீரர்..! குவியும் பாராட்டுகள்!
யார் அந்த ஆதித்யா அசோக்?
தமிழ்நாட்டின் வேலூர் நகரில் பிறந்த ஆதித்யா அசோக், தனது நான்கு வயதில் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அங்குள்ள கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாடி வந்த அவர், 2020 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சீனியர் நியூசிலாந்து அணியில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த் டாட்டூ
View this post on Instagram
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளங்கெட் ஷீல்டு போட்டியில், ஆக்லாந்து அணிக்காக விளையாடிய ஆதித்யா அஷோக், நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வீழ்த்தி கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றார். இதே ஆண்டில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தனது தாத்தாவின் நினைவாக அவருக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா பட வசனமான என் வழி தனி வழி என்பதை கையில் டாட்டூவாக வைத்திருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிக்க : IPL 2026: முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்-க்கு திரும்ப அழைத்ததா பிசிசிஐ? வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்!
முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சைமன் டூல், ஆதித்யா அஷோக்கை பற்றி பேசும்போது, தமிழ்நாட்டின் சென்னையச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது பெற்றோர் நியூசிலாந்தில் குடியேறினர். தனது 4 வயதில் இருந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடுகிறார். இஷ் சோதி, அஜாஸ் படேல் போல இந்திய வேர்கள் கொண்டவர்கள் நியூசிலாந்துக்காக விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். நல்ல ஸ்பின்னர்களுக்கு எப்போதும் நியூசிலாந்து அணியில் இடமுண்டு என்றார்.
இந்திய மண்ணில், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு எதிராக ஆதித்யா அசோக் எப்படி பந்து வீசப்போகிறார் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.