T20 World Cup 2026: வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுமா? இந்த முடிவு யாருக்கு பாதிப்பு?
Bangladesh Cricket Board: ஐபிஎல்லில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் நீக்கப்பட்டதை தொடர்ந்து வங்கதேச அரசு ஐபிஎல் ஒளிபரப்பை தடை செய்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2026 டி20 உலகக் கோப்பையில் தனது போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) தங்கள் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கையை ஐசிசி (ICC) நிராகரித்தது. இதுதொடர்பாக, வருகின்ற 2026 ஜனவரி 10ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும். சமீபத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிசிசிஐயின் உத்தரவின்பேரில் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவித்ததிலிருந்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. இப்போது, ஐசிசி வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்ததால், வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் வாய்ப்பு உள்ளது.
ALSO READ: போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற மறுத்த ஐசிசி.. வங்கதேச அணியின் அடுத்த திட்டம் என்ன?
என்ன நடந்தது..?
இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய வகையில் இருந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் 2 இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இது இந்தியாவில் போராட்டங்களைத் தூண்டியது. இதனை தொடர்ந்தும், அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு வாங்கியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் பல்வேரு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.




இந்தியாவில் அதிகரித்து வரும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிசிசிஐ, முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்றுகொண்ட கொல்கத்தா அணி, முஸ்தாபிசுரை விடுவித்து மாற்று வீரரை அறிவிப்பதாகக் கூறியது. இதற்கு, வங்கதேசமும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வங்கதேசம் அதிரடி நடவடிக்கை:
ஐபிஎல்லில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் நீக்கப்பட்டதை தொடர்ந்து வங்கதேச அரசு ஐபிஎல் ஒளிபரப்பை தடை செய்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2026 டி20 உலகக் கோப்பையில் தனது போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, ஐசிசி வெளியிட்ட அட்டவணையில் வங்கதேசத்தின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, வங்கதேசம் தனது குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் 3போட்டிகளை கொல்கத்தாவிலும், ஒரு போட்டியை மும்பையிலும் விளையாடும்.
ALSO READ: 2026 உலகக் கோப்பையில் விவிஐபி பாதுகாப்பு.. மறுத்த வங்கதேசம்.. வழி தெரியாமல் தவிக்கும் பிசிசிஐ!
வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகினால் என்ன நடக்கும்?
2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் விலக முடிவு செய்தால், அதன் இடத்தில் வேறொரு அணி சேர்க்கப்படலாம். முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் போது இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா வங்கதேசத்திற்கு பயணம் செய்ய மறுத்தது. ஆஸ்திரேலியாவின் இடத்தில் அயர்லாந்து போட்டியில் விளையாடியது. வங்கதேசம் இன்னும் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றாலும், என்ன முடிவை எடுக்கும் என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.