IPL 2026 : மழையால் போட்டி கைவிடப்பட்டால் டிக்கெட் கட்டணம் வழங்கப்படுமா? விதிகள் சொல்வது என்ன?
KKRvLSG: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெறும் கேகேஆர் மற்றும் எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலைில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்புடமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் 2026 சீசனில் மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் சூழல் அதிகரித்து வரும் நிலையில், மழையால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
மழையால் போட்டி கைவிடப்பட்டால் டிக்கெட் கட்டணம் வழங்கப்படுமா?
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியால் வெறும் 3.4 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால், போட்டி கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ள போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி கைவிடப்பட்டால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க : IPL 2026: ஆரஞ்சு தொப்பியுடன் ஜெய்ஸ்வால்.. பர்ப்பிள் கேப் யாரிடம் உள்ளது..? முழு விவரம்!




ஐபிஎல் விதிகளின்படி, ஒரு போட்டியில் முடிவு எட்டப்பட வேண்டுமெனில், 2வது இன்னிங்ஸில் குறைந்தது 5 ஓவர்கள் முழுமையாக வீசப்பட்டிருக்க வேண்டும். அதற்கும் குறைவாக பந்துகள் வீசப்பட்டிருந்தால், அந்த போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது என அறிவிக்கப்படும். அப்படி நடந்தால், இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
போட்டி நடந்து கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டால், போடப்படாத ஓவர்களுக்கு ஏற்ப டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு மாற்றம் செய்யப்படும். இதன் மூலம் போட்டியை ஓவர்களை குறைத்து நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஐபிஎல்லை பொறுத்தவரை லீக் போட்டிகளுக்கு, மழை போன்ற தடங்கல்களை சமாளிக்க கூடுதலாக 60 நிமிடங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த நேரத்திற்குள் மழை நின்றால், போட்டி முழுமையாக நடைபெறும். மேலும் இருக்கும் நேரத்தை பொறுத்து ஓவர்கள் குறைத்து நடத்த வாய்ப்பு வழங்கப்படும். உதாரணமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், 20 ஓவர் போட்டிகளை முழுமையாக நடத்த 8.30 மணி வரை காத்திருக்கலாம்.
இதையும் படிக்க : IPL 2026: கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் கொல்கத்தா.. லாக் செய்யுமா லக்னோ..?
அதற்குப் பிறகு தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு நான்கு நிமிட தாமதத்துக்கும் ஒரு ஓவர் குறைக்கப்படும். மேலும் நேரம் 10.30 முதல் 11 மணி வரை கூட 5 ஓவர் வரை போட்டியை நடத்தப்பட வாய்ப்பிருக்கறது. அதற்குள்ளும் போட்டி நடத்தப்படாவிட்டால் போட்டி முழுமையாக ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்த நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டால் மட்டுமே டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு முழுமையாக வழங்கப்படும். ஒரு பந்து வீசப்பட்டிருந்தால் கூட அந்த டிக்கெட் பயன்பட்டதாகவே கருதப்படும். கடந்த கொல்கத்தா போட்டியை போல 3.4 ஓவர்கள் மட்டுமே நடந்திருந்தால் கூட ரசிகர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.