KKR Vs LSG: மழையால் போட்டி பாதிக்குமா? போட்டி தடைபட்டால் என்ன நடக்கும்?
IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் ஏப்ரல் 9, 2026 இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
ஐபிஎல் 2026 சீசனில் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான முக்கிய போட்டியில் மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் , இந்திய வானிலை ஆய்வு மையம் ஈடன் கார்டன் மைதானத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது இதனால் இன்றைய போட்டி பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மழையால் போட்டி பாதிக்குமா?
இந்த 2026 ஐபிஎல் சீசனில் இதுவரை வெற்றியை பதிவு செய்யாத அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி, அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மோசமான தோல்வி என கொல்கத்தா அணியின் இந்த சீசனின் துவங்கமே அந்த அணிக்கு மோசமாக அமைந்துள்ளது. இதனால், இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.
இதையும் படிக்க : IPL 2026: ஆரஞ்சு தொப்பியுடன் ஜெய்ஸ்வால்.. பர்ப்பிள் கேப் யாரிடம் உள்ளது..? முழு விவரம்!




கொல்கத்தா அணி தனது கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டபோது, வெறும் 3.4 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. அதன்பின் பெய்த கனமழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்த நிலைமையில், கொல்கத்தா அணி தற்போது புள்ளிப்பட்டியலில் கீழே உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகிவிடும் என்பதால் இந்த போட்டி அவர்களுக்கு கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய நிலைக்கு மாறியுள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் கொல்கத்தாவுக்கு ஏப்ரல் 9, 2026 அன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏப்ரல் 8, 2026 நேற்று கொல்கத்தா நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9, 2026 இன்றும் காலை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும், பிற்பகல் முதல் மாலை வரை வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முக்கியமாக, போட்டி தொடங்கும் நேரமான மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை 21 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : IPL 2026: தாமதமாகும் எம்.எஸ்.தோனி வருகை.. ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!
ஒருவேளை மழை பெய்தால் போட்டி உடனடியாக தொடங்குவது சிரமமாக இருக்கலாம். ஏனெனில், கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மைதானம் ஈரப்பதமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மைதானம் விரைவாக உலராது என்பதால், போட்டி தாமதமாக தொடங்கவோ அல்லது ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்பு உள்ளது.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சிறந்த வடிகால் வசதி இருந்தாலும், தொடர்ந்து மழை பெய்து வரும் சூழ்நிலையில் முழு போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. மொத்தத்தில், கொல்கத்தா அணிக்கு வெற்றி அவசியமான போட்டியில், லக்னோ அணியை விட மழையே பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த போட்டி, மழை காரணமாக மீண்டும் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.