வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு மறுப்பு.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்!
Gautam Gambhir Responds Criticism : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறாதது குறித்து பதிலளித்த கவுதம் காம்பீர், சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் முடிவுகளை எடுப்பது தனது வேலை இல்லை என்றும், அணியின் நலனுக்காக சரியான முடிவுகளை எடுப்பதே தனது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படாதது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் முடிவுகளை எடுப்பது தனது வேலை இல்லை என்றும், அணியின் நலனுக்காக சரியான முடிவுகளை எடுப்பதே தனது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் என்று எதுவும் கிடையாது எனவும் கம்பீர் கூறியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு மறுப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான வைபவ் சூர்யவன்ஷி, கடந்த ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடியான பேட்டிங்கால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தத் தொடரில் அவர் படைத்த சாதனைகள் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருப்பினும், இந்திய அணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதால், வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.
இதையும் படிக்க : IPL 2027: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ்..? ஹர்திக் எதிர்காலம் என்ன..?




குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டபோது மூன்று போட்டிகளில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று, ஜிம்பாப்வே தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோதும் மூன்று போட்டிகளில் விளையாடினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் மாற்று அணி அமைப்பின் கீழ் சில போட்டிகளில் பங்கேற்றார்.
அந்த நேரத்தில் இந்திய அணி ஏற்கெனவே தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இதனால் தொடரின் முடிவை மாற்ற முடியாத நான்காவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, சிறப்பான திறமையைக் கொண்டுள்ள சூர்யவன்ஷிக்கு இதுபோன்ற போட்டிகளில் கூட வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.
விமர்சனங்களுக்கு கவுதம் காம்பீர் பதிலடி
இந்த நிலையில், ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம், திறமையான வீரர்கள் அதிகம் உள்ள அணியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கம்பீர், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் முடிவுகளை எடுப்பது தனது பொறுப்பு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “முதலில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்னுடைய வேலை இல்லை. சரியான முடிவுகளை எடுப்பதுதான் என்னுடைய பொறுப்பு.தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பது மிகவும் எளிதான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : WTC Points Table: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி.. முதலிடத்தை இழந்து 3வது இடத்திற்கு சரிந்த ஆஸ்திரேலியா!
சர்வதேச கிரிக்கெட்டில் எந்தப் போட்டியையும் முக்கியத்துவம் இல்லாத போட்டியாகக் கருத முடியாது. ஒவ்வொரு போட்டியும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், திறமைகளை மேம்படுத்துவதற்கும், அணியாக முன்னேறுவதற்கும் கிடைக்கும் வாய்ப்பாகவே பார்க்கப்பட வேண்டும். தொடரை ஏற்கெனவே வென்றுவிட்டோம் என்பதற்காக அடுத்த போட்டியை முக்கியத்துவம் இல்லாததாகக் கருதுவது தனது அணுகுமுறை அல்ல எனவும் கம்பீர் கூறியுள்ளார்.