IPL 2025: கொல்கத்தா அணிக்குள் மனஸ்தாபமா..? பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் மீது வீரர்கள் அதிருப்தி என தகவல்!
Chandrakant Pandit's KKR Troubles: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டுக்கும் அணியின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2025ல் அணியின் மோசமான செயல்பாடு மற்றும் பண்டிட்டின் கண்டிப்பு ஆகியவை இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கவுதம் கம்பீரின் இல்லாமை அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரகாந்த் பண்டிட் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது.

கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற எந்தவொரு விளையாட்டு போட்டிகளிலும் பயிற்சியாளர் என்பது மிகவும் முக்கியமான விஷயம். பயிற்சியாளர் தலைமையின் கீழ் ஒரு அணி சிறப்பாக செயல்படும் போதுதான் அந்த அணி அடுத்தக்கட்ட பயணத்தில் முன்னேறி செல்லும். அந்தவகையில், ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், அந்த அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டுக்கும் (Chandrakant Pandit) இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2024 சீசனில் சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் 2025 சீசனில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு சிறப்பாக எதுவும் அமையவில்லை.
மேலும், கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்று போட்டியிலிருந்து வெளியேறும் தருவாயில் உள்ளது. இப்போது இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட், இரவு உணவின் போது ஒரு மூத்த வீரருடன் சண்டையிட்டதாக செய்தி வந்துள்ளது.
என்ன நடந்தது..?
ரெவ்ஸ்போர்ட்ஸில் வெளியான தகவலின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் எதிர் அணியைச் சேர்ந்த ஒரு வீரருடன் இரவு உணவு சாப்பிட விரும்பியதால் ஒரு வெளிநாட்டு வீரருடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், யார் அந்த வீரர், எந்த காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டது உள்ளிட்ட விவரஙக்ள் தெரியவில்லை. அதேநேரத்தில், சந்திரகாந்த் பண்டிட்டின் பயிற்சியின் கீழ் பல வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
500 அபராதம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட், அந்த அணியில் சில விதிகளையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. கிடைத்த தகவலிபடி, பயிற்சிக்கு பிறகு இரவு உணவிற்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு பண்டிட் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அணியின் ஒற்றுமையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், இப்போது பல கிரிக்கெட் வீரர்கள் சந்திரகாந்த் பண்டிட் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
கம்பீரை மிஸ் செய்யும் கொல்கத்தா வீரர்கள்:
கடந்த ஐபிஎல் 2024 சீசனில் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். இவரது பயிற்சியின் கீழ் ஐபிஎல் 2024ல் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, அபிஷேக் நாயர் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளரானார். அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், கடந்த ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் பெற்றபோது, கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் பெயர்களே அதிகம் பேசப்பட்டது. அப்போது, சந்திரகாந்த் பண்ட்டின் பெயர் ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை. ஆனால், ஐபிஎல் 2025ல் சந்திரகாந்த் பண்டிட் முழுமையாக தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, அணி மோசமாக செயல்படுகிறது. மேலும் பெரிய விஷயம் என்னவென்றால், சமீபத்தில் ஹர்ஷித் ராணா, கவுதம் கம்பீரை மிஸ் செய்வதாக சூசகமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்தித் ராணா, “எங்கள் துணை பயிற்சியாளர்கள் கடந்த முறை போலவே உள்ளனர். அபிஷேக் நாயரும் திரும்பி வந்துவிட்டார். சந்து சார், பிராவோ எல்லாரும் சூப்பர் ஆனா ஏதோ மிஸ்ஸிங். நான் வேறு யாரையும் பற்றிப் பேசவில்லை. கம்பீரின் திறமை என்ன, அவர் அணியை எப்படி அழைத்துச் செல்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அதைப் பற்றித்தான் பேசுகிறேன்.” என்று தெரிவித்தார்.