இனிப்பு சாப்பிடாவிட்டாலும் ரத்த சர்க்கரை உயருமா? உண்மை பின்னணி!
Blood Sugar Spikes: இனிப்பு உணவுகளைத் தவிர்த்தாலும் இன்சுலின் எதிர்ப்பு, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளால் உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரக்கூடும். மேலும், நாம் உண்ணாத நேரங்களில் உடலுக்கு ஆற்றல் தர கல்லீரல் அதிகப்படியான குளுக்கோஸை வெளியிடுவதும், மைதா மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வதும் சர்க்கரை அளவை உயர்த்துகின்றன.
பொதுவாக இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்வதாலேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக நிலவுகிறது. இருப்பினும், இனிப்பை முற்றிலும் தவிர்க்கும் பலருக்குக்கூட ரத்த சர்க்கரை அளவு எதிர்பாராத விதமாக உயருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மனித உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உணவு மட்டுமல்லாமல் இன்சுலின் ஹார்மோனின் செயல்பாடு, கல்லீரலின் இயக்கம், தூக்கத்தின் அளவு மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கல்லீரலின் குளுக்கோஸ் வெளியீடு
மனித உடலின் செல்களுக்குள் குளுக்கோஸைக் கொண்டு சேர்க்கும் பணியை இன்சுலின் ஹார்மோன் மேற்கொள்கிறது. உடலில் ‘இன்சுலின் எதிர்ப்பு’ (Insulin Resistance) உருவாகும்போது, செல்கள் இன்சுலினுக்குச் சரியாகப் பதிலளிக்கத் தவறுகின்றன; இதனால் ரத்தத்தில் சர்க்கரை தங்கி அளவு படிப்படியாக உயர்கிறது. மேலும், நாம் உணவு உண்ணாத நேரங்களிலும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்க கல்லீரல் குளுக்கோஸைச் சேமித்து வைத்து வெளியிடுகிறது. ஆனால், நீரிழிவு பாதிப்பு அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இந்தச் செயல்முறைக் கட்டுப்பாடு சீர்குலைந்து, கல்லீரல் அளவுக்கு அதிகமாகக் குளுக்கோஸை ரத்தத்தில் செலுத்துவதால் வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு உயர்கிறது.
மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையின் தீவிர தாக்கம்
மன அழுத்தம் அல்லது கவலை அதிகரிக்கும் போது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்கள் கல்லீரலைத் தூண்டி அதிக அளவில் குளுக்கோஸை உருவாக்க வழிவகுக்கின்றன. அதேபோல், சீரான தூக்கம் இல்லாத நிலையும் இன்சுலின் செயல்பாட்டைப் பாதித்து, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை நிலைகுலையச் செய்கிறது. போதிய தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோன்களின் அளவை உயர்த்துவதால், உணவு சாப்பிடாமலேயே ரத்தத்தில் சர்க்கரை எகிற வாய்ப்புள்ளது.
Also Read: காலை உணவில் எவற்றை தவிர்க்க வேண்டும்? எவற்றை சேர்க்க வேண்டும்?
தொற்றுகளின் தாக்கம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்
உடலில் காய்ச்சல், வைரஸ் பாதிப்பு அல்லது பிற நோய்த்தொற்றுகள் ஏற்பாடும் போது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதனை எதிர்கொள்ளப் பல ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதன் காரணமாக கல்லீரல் குளுக்கோஸ் உற்பத்தியை அதிகரிப்பதால், நோய்வாய்ப்படும் காலங்களில் சர்க்கரை அளவு தற்காலிகமாக உயர்கிறது. மற்றொருபுறம், இனிப்பாக இல்லாவிட்டாலும் வெள்ளை அரிசி, மைதா, பேக்கரி உணவுகள் மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் செரிமானத்திற்குப் பின் வேகமாக குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கின்றன.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.