மழைக்காலத்தில் மாயாஜாலம் காட்டும் இந்தியாவின் 5 அசத்தல் இடங்கள்!
Monsoon Travel: மழைக்காலத்தில் இந்தியாவின் சில சுற்றுலாத் தலங்கள் பசுமை, நீர்ப்பரப்பு மற்றும் வித்தியாசமான இயற்கைக் காட்சிகளால் புதிய அழகைப் பெறுகின்றன. ராஜஸ்தானின் பன்ஸ்வாரா, மணிப்பூரின் லோக்டாக் ஏரி, கர்நாடகாவின் ஷெட்டிஹள்ளி, கேரளாவின் மலரிக்கல் மற்றும் மகாராஷ்டிராவின் நானேகாட் ஆகியவை மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய சிறப்பு இடங்களாகும்.
இந்தியாவில் பருவமழை தொடங்கியதும் சில சுற்றுலாத் தலங்களின் இயற்கை அழகு முற்றிலும் மாறிவிடுகிறது. பசுமையான மலைகள், நீரால் சூழப்படும் பகுதிகள், மிதக்கும் தீவுகள், மலர்களால் நிறம் மாறும் வயல்கள் என மழைக்காலத்தில் மட்டுமே ரசிக்கக்கூடிய பல்வேறு இயற்கைக் காட்சிகள் இங்கு காணப்படுகின்றன. குறிப்பிட்ட சில வாரங்கள் அல்லது மாதங்களில் மட்டுமே இந்த சிறப்பு காட்சிகளை காண முடியும் என்பதால், இயற்கை சார்ந்த பயணங்களை விரும்புபவர்கள் இந்த இடங்களைத் திட்டமிட்டு பார்வையிடலாம்.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா
பொதுவாக பாலைவன நிலப்பரப்புக்காக அறியப்படும் ராஜஸ்தான், மழைக்காலத்தில் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தைப் பெறுகிறது. மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பன்ஸ்வாரா, மழைக்காலத்தில் பசுமையான சிறு குன்றுகளும் அவற்றைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்புகளும் இணைந்து அழகிய காட்சியை உருவாக்குவதால் ‘நூறு தீவுகளின் நகரம்’ என அழைக்கப்படுகிறது. மாஹி பாஜாஜ் சாகர் அணை மற்றும் சாச்சா கோட்டா உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கால இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலம் இப்பகுதியின் பசுமையை ரசிக்க ஏற்றதாகக் கருதப்படுகிறது.
நீரில் மூழ்கும் ஷெட்டிஹள்ளி தேவாலயம்
கர்நாடகாவின் ஹாசன் அருகே அமைந்துள்ள ஷெட்டிஹள்ளி, மழைக்காலத்தில் தனித்துவமான காட்சியை வழங்குகிறது. 1860களில் பிரெஞ்சு மதபோதகர்களால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம், பின்னர் அணை மற்றும் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டதையடுத்து கைவிடப்பட்டது. மழை அதிகரித்து நீர்மட்டம் உயரும் போது தேவாலயத்தின் ஒரு பகுதி நீருக்குள் மூழ்கி, அதன் பழமையான வளைவுகள் மற்றும் கட்டமைப்புகள் மட்டும் நீருக்கு மேலே தெரியும். மழைப்பொழிவு மற்றும் நீர்மட்டத்தைப் பொறுத்து ஒவ்வொரு காலத்திலும் இங்கு காணப்படும் காட்சி மாறுபடும்.
Also Read: தரையை துடைக்கிறீர்களா..? இதை சேர்த்தால் வீடு மணக்கும்!
மிதக்கும் தீவுகளைக் கொண்ட லோக்டாக் ஏரி
மணிப்பூரில் உள்ள லோக்டாக் ஏரி, இந்தியாவின் வித்தியாசமான இயற்கைச் சூழல்களில் ஒன்றாகும். இங்கு ‘பும்திஸ்’ எனப்படும் தாவரங்கள், மண் மற்றும் இயற்கை உயிரியல் பொருட்களால் உருவான பெரிய மிதக்கும் நிலப்பரப்புகள் நீரின் மேல் காணப்படுகின்றன. சில இடங்களில் மீனவர்களின் குடியிருப்புகளும் இந்த மிதக்கும் பகுதிகளுடன் இணைந்துள்ளன. ஏரியை படகில் சென்று பார்ப்பதுடன், அருகிலுள்ள சென்ட்ரா பகுதியில் இருந்து ஏரியின் பரந்த காட்சியையும் ரசிக்கலாம். உலகின் ஒரே மிதக்கும் தேசியப் பூங்காவாகக் குறிப்பிடப்படும் கெய்புல் லாம்ஜாவோ தேசியப் பூங்காவும் இப்பகுதியில் அமைந்துள்ளது.
இளஞ்சிவப்பு மலர்களால் மாறும் மலரிக்கல்
கேரளாவின் கோட்டயம் அருகே அமைந்துள்ள மலரிக்கல், மழைக்காலத்தில் நீர்த்தாமரை மலர்களால் கண்ணைக் கவரும் பகுதியாக மாறுகிறது. நீர் நிறைந்த நெல்வயல்களில் இளஞ்சிவப்பு நிற மலர்கள் அதிகளவில் மலரும் போது, வயல்கள் முழுவதும் வண்ணமயமான தோற்றம் பெறுகின்றன. சிறிய படகுகளில் மலர்கள் நிறைந்த வயல்களுக்கு இடையே பயணம் செய்வது இப்பகுதியின் முக்கியமான அனுபவமாக உள்ளது. அதிகாலை நேரத்தில், குறிப்பாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்றால் மலர்கள் விரிந்திருக்கும் காட்சியை ரசிக்க முடியும். மழைக்காலத்தின் உச்சத்தில் இந்த இயற்கைக் காட்சி மேலும் அழகாகத் தெரியும்.
மேல்நோக்கி செல்லும் நீர்வீழ்ச்சி
மகாராஷ்டிராவின் நானேகாட் பகுதியில் மழைக்காலத்தில் இயற்கையின் வித்தியாசமான நிகழ்வை பார்க்க முடியும். பலத்த காற்று வீசும் நேரங்களில் பாறையிலிருந்து கீழ்நோக்கி விழும் நீர் மீண்டும் மேல்நோக்கி தள்ளப்படுவது போன்ற தோற்றம் உருவாகிறது. இதனால் ‘ரிவர்ஸ் வாட்டர்ஃபால்’ எனப்படும் விசித்திரமான காட்சி காணப்படுகிறது. மலைப்பாதையில் வீசும் வலுவான காற்றே இதற்குக் காரணமாகும். எனினும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறையும் உறுதியாக பார்க்க முடியாது; மழை மற்றும் காற்றின் வேகத்தைப் பொறுத்தே அதன் தீவிரம் மாறும். நானேகாட் பழமையான வர்த்தகப் பாதையாகவும் வரலாற்றுச் சிறப்பு பெற்றுள்ளதால், இயற்கையுடன் வரலாற்றையும் ஒருசேர ரசிக்க முடியும்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.