வீட்டை சூழ்ந்த மழைநீர்.. கதவை ஸ்டிரெச்சராக மாற்றி கர்ப்பிணியை காப்பாற்றிய மக்கள்!
Pregnant Woman Saved In Maharashtra Heavy Rain | மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், கனமழையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், கிராம மக்கள் வீட்டின் கதவை ஸ்டிரெச்சராக மாற்றி கர்ப்பிணை காப்பாற்றியுள்ளனர்.
மும்பை, ஜூலை 09 : மகாராஷ்டிராவில் (Maharashtra) கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், கடும் மழையால் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்த நிலையில்,பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை வீட்டின் கதவை ஸ்டிரெச்சராக மாற்றி கிராம மக்கள் காப்பாற்றியுள்ளனர். உரிய நேரத்தில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதன் காரணமாக, சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் இடுப்பளவு மழைநீர் தேங்கியுள்ளது.
இதையும் படிங்க : குடும்ப மரபுகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்க ‘LifeTree’ தளம்.. இது எப்படி செயல்படும்?
இந்த சூழலில் அங்குள்ள அனுமன்பாதா என்ற கிராமத்தில் ஒரு கர்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த பெண் இருக்கும் பகுதியை சுற்றி மழை நீர் தேங்கியிருந்ததன் காரணமாக அங்கு ஆம்புலன்ஸ் வாகனம் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவ கிராம மக்கள் முன்வந்துள்ளனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து எடுத்து அதில் கர்ப்பிணியை படுக்க வைத்து தோலில் தூக்கிச்சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆண் குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் நலம்
கிராம மக்கள் எடுத்த அந்த முடிவால் கர்ப்பிணி உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பிறகு அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.