ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இனிஸ்கிரீன்ஷாட், வாட்ஸ்அப் டிக்கெட் செல்லாது – புதிய விதிகள் சொல்வது என்ன?
பயணிகள் டிக்கெட் பதிவு செய்யப்பட்ட அதே செல்போனை பயணத்தின் போது உடன் வைத்திருக்க வேண்டும். மேலும், செல்போனில் போதுமான மின்கலம் இருப்பதையும், பயணத்திற்கு முன் நிலையம், பயண தேதி உள்ளிட்ட டிக்கெட் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஸ்கிரீன்ஷாட் அல்லது பிறர் அனுப்பிய டிக்கெட்டுகளை நம்பி பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 9, 2026: முன்பதிவில்லா டிஜிட்டல் ரயில் டிக்கெட்டுகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிக்கெட் பரிசோதனையின் போது ரயில் ஒன் செயலியில் உள்ள அசல் டிக்கெட் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், ஸ்கிரீன்ஷாட், புகைப்படம், PDF நகல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட டிக்கெட்டுகள் ஏற்கப்பட மாட்டாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் டிக்கெட் மோசடிகளை தடுக்கும் முயற்சி:
டிஜிட்டல் டிக்கெட்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடைமுறை கடுமையாக அமல்படுத்தப்படுவதாகவும், டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட அதே செல்போன் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலேயே அசல் டிக்கெட் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோர்பா–விசாகப்பட்டினம் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், தனது சகோதரர் முன்பதிவு செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பிய டிக்கெட் ஸ்கிரீன்ஷாட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தார். விசாரணையில், டிக்கெட் ரயில் புறப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்டதும், அது பயணியின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இல்லாததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த டிக்கெட் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, ரயில்வே விதிகளின்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு புதிய விதிமுறை:
ரயில்வே வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, முன்பதிவில்லா டிஜிட்டல் டிக்கெட்டுகள் ரயில் புறப்படுவதற்கு முன்பே பதிவு செய்யப்பட வேண்டும். ரயில் நிலையத்தை விட்டு புறப்பட்ட பிறகு பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள், அவை ரயில் ஒன் செயலியில் இருந்தாலும் செல்லுபடியாகாது.
பயணிகள் டிக்கெட் பதிவு செய்யப்பட்ட அதே செல்போனை பயணத்தின் போது உடன் வைத்திருக்க வேண்டும். மேலும், செல்போனில் போதுமான மின்கலம் இருப்பதையும், பயணத்திற்கு முன் நிலையம், பயண தேதி உள்ளிட்ட டிக்கெட் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஸ்கிரீன்ஷாட் அல்லது பிறர் அனுப்பிய டிக்கெட்டுகளை நம்பி பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது:
இந்த விதிமுறைகள் ரயில் ஒன் செயலி மூலம் பெறப்படும் முன்பதிவில்லா டிஜிட்டல் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தின் மூத்த வர்த்தக மேலாளர் அவதேஷ் குமார் திரிவேதி கூறுகையில், டிக்கெட் பரிசோதனையின் போது ரயில் ஒன் செயலியில் உள்ள அசல் டிக்கெட்டை மட்டுமே பயணிகள் காண்பிக்க வேண்டும். வாட்ஸ்அப், PDF அல்லது ஸ்கிரீன்ஷாட் வடிவிலான டிக்கெட்டுகள் ஏற்கப்படாது. விதிமுறைகளை மீறினால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.