மனைவியுடன் மீண்டும் இணைய மாந்திரீகம் செய்த நபர்.. 6 வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூரம்!
Rajasthan Child Sacrifice | ராஜஸ்தானில் மனைவி வீட்டை விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், அதற்காக மாந்திரீக பூஜை செய்ய முயன்ற கணவன் தனது உறவினரின் 6 வயது மகனை பலி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான், ஜூலை 24 : ராஜஸ்தானில் (Rajasthan) பிரிந்து சென்ற மனைவி மீண்டும் தன்னுடன் இணைவதற்காக செய்யப்பட்ட மாந்திரீக பூஜையில் 6 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மாந்திரீக பூஜைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரிந்து சென்ற மனைவி திரும்பி வருவதற்காக நடத்தப்பட்ட பூஜை
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள சராய் கலன் கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. அதாவது ஜூலை 19, 2025 அன்று லோகேஷ் என்ற 6 வயது சிறுவன் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுவன் காணாமல் போன அதே நாளில், அந்த பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றில் வைக்கோலுக்கு அடியில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க : ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரை கொன்று உடலை டைல்ஸ் அடியில் புதைத்த மனைவி – மும்பை அருகே அதிர்ச்சி!




மீட்கப்பட்ட சிறுவனின் சடலத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இருந்த நிலையில், உடலில் பல இடங்களில் ஊசி குத்தியதற்கான தடையங்ளும் இருந்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிறுவனின் மாமா மனோஜ் குமார் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில் அவர் சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறுவன் கொலை செய்யப்பட்ட பகீர் பின்னணி – குற்றவாளிகள் வாக்குமூலம்
குடும்ப தகராறு காரணமாக மனோஜின் மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில், அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவி மீண்டும் வீட்டிற்கு வரவேண்டு என நினைத்த மனோஜ், சுனில் குமார் என்பவரின் உதவியை நாடியுள்ளார். இந்த நிலையில், மனைவி மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும் என்றால் ரூ.12,000 பணம், ஒரு குழந்தையின் கல்லீரல் மற்றும் ரத்தத்தை காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்றும் சுனில் கேட்டுள்ளார். அதற்கு ஒப்புதல் தெரிவித்த மனோஜ், தனது உறவினரின் மகனான லோகேஷை கடைக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு ஆல்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க : காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்.. உடலை சாலையில் வீசிய கொடூரம்.. பகீர் பின்னணி!
பின்னர் ஊசிகள் மூலம் சிறுவனின் உடலில் இருந்து ரத்தத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் சிறுவனின் கல்லீரலை எடுப்பதற்காக உடலை அவர் வைக்கோலுக்கு கீழே மறைத்து வைத்துள்ளார். இந்த நிலையில், போலீசார் சிறுவன் மறைத்துவைக்கப்பட்ட இடத்திற்கு சென்று உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.