கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி, கேரள ஆசிரியைக்கு பாராட்டு – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி
மன் கி பாத்' நிகழ்ச்சியில், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தனது உரையின்போது, தற்சார்பு பாதுகாப்புத் துறை, நகேட்ச் தி ரெயின் இயக்கம் மற்றும் இந்தியாவின் விண்வெளித் திறன் ஆகியவை குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத் நிகழ்ச்சியின் 136வது அத்தியாயம் ஒலிபரப்பானது. நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், கார்கில் வெற்றி தினத்தைக் குறிப்பிட்டு, நாட்டின் துணிச்சலான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி தனது உரையைத் தொடங்கினார். பெரும் சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்திய வீரர்கள் தளராமல் போராடி நாட்டிற்கு வெற்றியைத் தேடித்தந்ததை அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், காலண்டரைப் பார்க்காமலேயே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள் ஜூலை 26. இன்று கார்கில் வெற்றி தினம் . இது நமக்கு பெருமிதத்தை அளிப்பதோடு, நமது வீரர்களின் அசாத்தியமான துணிச்சலையும் நினைவூட்டும் நாளாகும்.
மேலும் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பம், நீர் பாதுகாப்பு மற்றும் ‘கேட்ச் தி ரெயின்’ இயக்கம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். ஐஎன்எஸ் மகேந்திரகிரி மற்றும் பினாகா ஏவுகணை ஆகியவற்றை உதாரணமாகக் கொண்டு, பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்து வருவதாக அவர் கூறினார்.
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட போர் கப்பல்
நவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் மகேந்திரகிரி முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதாகவும், அதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்சார்பு இந்தியா என்பதன் வளர்ந்து வரும் வலிமைக்கு இது ஒரு சான்று என்றார். இதற்கிடையில், நாடு தழுவிய நீர் பாதுகாப்பு இயக்கம் நடைபெற்று வருவதாகவும், மத்திய பிரதேசத்தில் மட்டும் 4,000 குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதை அவர் வலியுறுத்தினார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் தான் இந்தோனேசியாவிற்குச் சென்றிருந்ததையும், அங்கு பிரம்மோஸ் மற்றும் அஸ்த்ரா ஏவுகணைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார். வீரர்களின் துணிச்சலுக்கு இணையாக, இந்தியா தனது தொழில்நுட்பத் திறன்களையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் துறை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, நாடு இத்துறையில் தொடர்ந்து சிறந்து விளங்குவதைக் குறிப்பிட்டார். கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கியுள்ளதையும், ஒட்டுமொத்த நாடும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஜப்பான் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார். மேலும், பெண்கள் அணி தங்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், கால்பந்து விளையாட்டு விதிகள் மற்றும் போட்டி நிகழ்வுகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரையும் பிரதமர் பாராட்டினார்.
‘கேட்ச் தி ரெயின்’ இயக்கம்
தனது உரையில், ‘கேட்ச் தி ரெயின்’ இயக்கம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். மழைநீர் எங்கு விழுகிறதோ அங்கேயே அதைச் சேகரித்துச் சேமிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்று அவர் விளக்கினார். இதற்காக ஜூலை 4 ஆம் தேதி ஒரு சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்தில் 4,000 குளங்கள் அமைக்கப்பட்டதையும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றதையும் அவர் கூறினார். இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு சொட்டு நீரும் எதிர்காலத்திற்கான ஒரு சொத்து என்பதை அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் விண்வெளித் துறையில் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நாம் அனைவரும் கண்டோம் என்று அவர் குறிப்பிட்டார். தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் இதுவே என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றிய ஒன்றை, நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அசாதாரணத் திறமை, ஆர்வம் மற்றும் விடாமுயற்சி மூலம் சாதித்துக் காட்டியுள்ளனர் என்று அவர் கூறினார்.