பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம் முதல் CSAM வரை… மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா!
சட்டவிரோதமான பல்வேறு உள்ளடக்கங்கள் தங்களது தளங்களில் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதை மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், குறிப்பிட்ட இலக்கு பயனர்களை அடையும் வகையில் கட்டண அடிப்படையிலான புரமோஷன்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூடுதல் விளக்கம் பெற மெட்டா அதிகாரிகள் மீண்டும் ஆஜராக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6, 2026: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக (CSAM) உள்ளடக்கங்கள், டீப் ஃபேக் பதிவுகள் மற்றும் தளத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெட்டா நிறுவனத்திடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய அரசு:
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மெட்டாவின் சர்வதேச அதிகாரிகள் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அண்மையில் மெட்டாவுக்கு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக (CSAM) உள்ளடக்கங்கள், டீப் ஃபேக் பதிவுகள் மற்றும் தளத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட தவறுகளுக்காக மார்க் சக்கர்பெர்க் சார்பில் மெட்டா அதிகாரிகள் மன்னிப்பு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் “இடைநிலை சேவை வழங்குநர்” என்ற வரையறையின் கீழ் மெட்டா வராது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. எந்தப் பயனருக்கு எந்த உள்ளடக்கம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை மெட்டா நிறுவனமே தீர்மானிப்பதால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ‘Safe Harbour’ சட்டப் பாதுகாப்பு மெட்டாவுக்கு பொருந்தாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம்:
அதேபோல், குறிப்பிட்ட வகையான உள்ளடக்கங்களை குறிப்பிட்ட பயனர்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க பணம் செலுத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட தவறுக்கு மெட்டா அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமான பல்வேறு உள்ளடக்கங்கள் தங்களது தளங்களில் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதை மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், குறிப்பிட்ட இலக்கு பயனர்களை அடையும் வகையில் கட்டண அடிப்படையிலான புரமோஷன்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூடுதல் விளக்கம் பெற மெட்டா அதிகாரிகள் மீண்டும் ஆஜராக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா, மெட்டா நிறுவனத்திற்கு உலகிலேயே அதிக பயனர்கள் உள்ள மிகப்பெரிய சந்தையாகும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ:
கடந்த ஜூலை 23ஆம் தேதி, ஆன்லைன் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” முன்னெடுத்த போராட்டங்களின் உச்சகட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செங்குத்து வடிவிலான வீடியோ, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்காலிகமாக நீக்கப்பட்டது. பின்னர் அது மீண்டும் பதிவேற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என்றும், உள்ளடக்கம் தவறுதலாக நீக்கப்பட்டதாகவும் மெட்டா விளக்கம் அளித்தது. ஆனால், அந்த விளக்கத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போதுமானதாக ஏற்கவில்லை.
இதனிடையே, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகளை கட்டுப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு வெளியான ராய்ட்டர்ஸ் விசாரணை அறிக்கையில், மோசடி விளம்பரங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மூலம் மெட்டா நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியதாக குறிப்பிடப்பட்டது. போலியான முதலீட்டு திட்டங்கள், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விளம்பரங்களை தடுக்க மெட்டா தவறியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.