மக்களே நோட் பண்ணுங்க.. சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் இதோ..
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ஆகஸ்ட் 7, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனுடன், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவையும் சேர்த்து மொத்தம் நான்கு நாட்கள் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 6, 2026: இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா மற்றும் புனித ஜார்ஜ் கோட்டை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதால், சென்னை பெருநகர காவல்துறை முக்கிய போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ஆகஸ்ட் 7, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனுடன், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவையும் சேர்த்து மொத்தம் நான்கு நாட்கள் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
சென்னையில் போக்குவரத்து மாற்றம்:
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
- உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை மற்றும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப் பகுதி வரையிலான ராஜாஜி சாலையில், அனுமதி அட்டை பெற்ற வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.
- அதேபோல், பாரிமுனையிலிருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்கச் சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம் மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
சிவப்பு மற்றும் ஊதா நிற அனுமதி அட்டை வைத்திருப்போர்:
- காலை 8.30 மணிக்குள் வருவோர் ராஜாஜி சாலை வழியாகச் சென்று தலைமைச் செயலக உள்வாயில் அருகே இறங்கி, தங்களது வாகனங்களை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும்.
- காலை 8.30 மணிக்குப் பிறகு வருவோர், போர் நினைவுச் சின்னம், கொடிமரச் சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்கச் சாலை மற்றும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயில் அருகே இறங்கி, பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற அனுமதி அட்டை வைத்திருப்போர்:
- காலை 8.30 மணிக்குள் வருவோர், ராஜாஜி சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிமரச் சாலை, முத்துசாமி சாலை, வடக்கு கோட்டை பக்கச் சாலை மற்றும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயில் அருகே இறங்கி, பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
- காலை 8.30 மணிக்குப் பிறகு வருவோர், காமராஜர் சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்கச் சாலை மற்றும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலக வெளிவாயிலை அடைந்து, பொதுப்பணித் துறை வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
- மேலும், அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர் நினைவுச் சின்னம் அருகே இறங்கிவிட்டு, தங்களது வாகனங்களை தீவுத்திடல் வளாகத்தில் நிறுத்த வேண்டும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.