மாநிலங்களவை வேட்புமனு நிராகரிப்பு.. காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா.. நீதிமன்றத்தை நாட முடிவு!
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வியுடன் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
டெல்லி, ஜுன் 10: மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதோடு, சட்டரீதியாக நீதிமன்றத்தில் சவால் விடுக்கவும் தயாராகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட் மற்றும் பூபேஷ் பாகல் ஆகியோர் புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்திற்கு நேரில் சென்றனர்.
மேலும் படிக்க: LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு.. புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!
தேர்தல் ஆணையம் முன்பு குவிந்த தலைவர்கள்:
முன்னதாக எவ்வித முன்அனுமதியும் பெறாமல் அவர்கள் வந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தாலும், தங்களது வருகை குறித்து கே.சி.வேணுகோபால் முன்கூட்டியே அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்ததாக காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முதன்மை வாயில் அருகே குவிந்த தலைவர்கள், திடீரென அங்குள்ள தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரும் உயர் அதிகாரிகளும் அங்கு வந்து, அப்பகுதியில் தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறி கலைந்து போகக் கோரினர். எனினும், தலைவர்கள் தொடர்ந்து தங்கள் மனுவைச் சமர்ப்பிக்கக் காத்திருந்தனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் அளித்த மனுவைப் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அதற்குப் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் அரசியல் பிரிவு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதோடு, இது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநில தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அறிக்கை கேட்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ் தூதுக்குழுவினர் புதன்கிழமை நண்பகல் வேளையில் தேர்தல் அதிகாரிகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
மத்தியப் பிரதேச மாநிலங்களவை வேட்பாளராக மீனாட்சி நடராஜன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக தலைவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறைப்படி ஒரு புகாரை அளித்தனர். அதில், மீனாட்சி நடராஜன் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தெலங்கானா மாநிலத்தில் நிலுவையில் உள்ள ஒரு நீதிமன்ற வழக்கு குறித்த விவரங்களை மறைத்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது அனைத்து வழக்குகளையும் குறிப்பிடுவது கட்டாயமாகும். இந்த முக்கியத் தகவலை அவர் மறைத்தது விதிமீறல் என்பதால், அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என பாஜக கோரியது. இந்த ஆட்சேபனையை ஏற்றுக் கொண்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தார்.
மேலும் படிக்க: நேருவின் பத்தாண்டு கால சாதனையை முறியடிக்கப்போகும் பிரதமர் மோடி.. ஜூன் 10 நடக்கப்போகும் சாதனை என்ன?
காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை:
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வியுடன் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. மாநிலங்களவைத் தேர்தல் நடைமுறைகளின்படி, தேர்தல் ஆணையம் அட்டவணையை மட்டுமே அறிவிக்கும்; ஆனால், வேட்புமனுக்களை ஆய்வு செய்து முடிவெடுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்தந்த மாநில அரசுகளின் கீழ் வரும் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.