LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு.. புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!
LPG Cylinder Rules: PNG வசதி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது தற்போதைய எல்பிஜி இணைப்பு நிலையை சரிபார்த்து கொள்ள வேண்டும். புதிய விதிமுறைகள் குறித்து அருகிலுள்ள கேஸ் ஏஜென்சி அல்லது சேவை வழங்குநரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜூன் 8, 2026: வீட்டில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துகிறீர்களா..? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்காகத்தான். மத்திய அரசு தற்போது எல்பிஜி மற்றும் பைப் வழி இயற்கை எரிவாயு தொடர்பாக சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த புதிய மாற்றங்கள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அனைவரும் அவற்றை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பைப் வழி இயற்கை எரிவாயு வசதி ஏற்கனவே கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், எல்பிஜி சிலிண்டர் இணைப்பை கைவிட்டு கட்டாயமாக PNG இணைப்புக்கு மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், PNG வசதி இருந்தும் இரண்டையும் பயன்படுத்தி வந்தவர்களின் எல்பிஜி இணைப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேஸ் ஏஜென்சிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, தற்போது அந்த விதிகளில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 நாட்கள் அவகாசம்
புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, ஏற்கனவே எல்பிஜி இணைப்பு வைத்திருக்கும் ஒருவர் புதியதாக PNG இணைப்பை பெற்றால், உடனடியாக எல்பிஜி இணைப்பை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, PNG இணைப்பு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, 30 நாட்களுக்குள் எல்பிஜி இணைப்பை சரெண்டர் செய்ய வேண்டும். இதேசமயம், பின்னர் PNG வசதி இல்லாத பகுதிக்கு குடிபெயர வேண்டிய சூழல் ஏற்பட்டால், பயனாளிகளுக்கு “டிரான்ஸ்ஃபர் வவுச்சர்” வழங்கப்படும். அதன் மூலம் மீண்டும் எளிதாக எல்பிஜி இணைப்பை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PNG இணைப்பால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்
சிலிண்டர் முன்பதிவு சிக்கல் இல்லை:
எல்பிஜி சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் அடிக்கடி சிலிண்டர் புக் செய்ய வேண்டும். புக்கிங் செய்த பிறகு டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. சில நேரங்களில் டெலிவரி தாமதமாகும். டெலிவரி செய்யும் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாவிட்டால் கூட சிரமம் ஏற்படும்.
ஆனால் PNG இணைப்பில் இந்த பிரச்சினைகள் எதுவும் இருக்காது. குழாய் வழியாக தொடர்ந்து கேஸ் விநியோகம் நடைபெறும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பயன்படுத்திய அளவுக்கே கட்டணம்
எல்பிஜி சிலிண்டரில் முழு கேஸ் நிரப்பப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதை சரிபார்ப்பதும் சிரமமான விஷயமாகும். ஆனால் PNG இணைப்பில் மீட்டர் அடிப்படையில் பில்லிங் செய்யப்படும். அதாவது, நீங்கள் எவ்வளவு கேஸ் பயன்படுத்துகிறீர்களோ அதற்கேற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் தேவையற்ற செலவுகள் குறையும். மேலும், கேஸ் திருட்டு அல்லது அளவு குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கும் வாய்ப்பில்லை. இரு மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு அதிகம்:
PNG எரிவாயு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. லீக்கேஜ் ஏற்பட்டாலும், அது காற்றுடன் விரைவாக கலந்துவிடும் என்பதால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் குறைவு. ஆனால் LPG கேஸ் காற்றை விட கனமாக இருப்பதால், தரை மட்டத்தில் தேங்கி நிற்கும். இதனால் தீ விபத்து அல்லது வெடிப்பு அபாயம் அதிகமாக இருக்கும்.
சுத்தமான சமையல் அனுபவம்
PNG பயன்படுத்துவதால் மசி, புகை, எண்ணெய் பசை போன்ற பிரச்சினைகள் குறையும். சமையலறை சுத்தமாக இருக்கும். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கவனிக்க வேண்டியது என்ன?
PNG வசதி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது தற்போதைய எல்பிஜி இணைப்பு நிலையை சரிபார்த்து கொள்ள வேண்டும். புதிய விதிமுறைகள் குறித்து அருகிலுள்ள கேஸ் ஏஜென்சி அல்லது சேவை வழங்குநரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை, நகர்ப்புறங்களில் எரிவாயு விநியோகத்தை சீரமைப்பதற்கும், பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.