Dengue Vaccine: முதல் முறையாக இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்.. யாரெல்லாம் இதனை செலுத்திக்கொள்ளலாம்? இது எப்படி செயல்படும்?
QDENGA தடுப்பூசியை இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும். ஒரு தவணையின் விலை சுமார் 6,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வரும் ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் நிலையில் தடுப்பூசியின் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 20, 2026: உலகளவில் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகும் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். தேசிய கொசு மூலம் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 2025ஆம் ஆண்டு 1,21,824 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டான 2024ஆம் ஆண்டு 297 பேரும், 2023ஆம் ஆண்டு 485 பேரும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். டெங்கு தொடர்ந்து இந்தியாவின் முக்கிய பொது சுகாதாரச் சவாலாக இருந்து வருவதை இந்தத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி:
இந்த நிலையில், டெங்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான டகேடா பார்மாசூட்டிக்கல்ஸ் உருவாக்கிய ‘QDENGA’ என்ற டெங்கு தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பதிவாகும் டெங்கு பாதிப்புகள் 11 மடங்கு அதிகரித்துள்ளதாக டகேடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுடன் பயனுள்ள தடுப்பூசியும் இணைவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
QDENGA தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?
QDENGA என்பது நான்கு வகையான டெங்கு வைரஸ் செரோடைப்களையும் எதிர்த்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உயிரிழக்கச் செய்யப்பட்ட தடுப்பூசியாகும். DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 ஆகிய நான்கு வகையான டெங்கு வைரஸ்களுக்கும் எதிராக இந்தத் தடுப்பூசி செயல்படுகிறது.
மேலும் படிக்க: ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலி.. மேலும் 12 பேர் சிகிச்சை!
ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், ஏற்படாவிட்டாலும் இந்தத் தடுப்பூசியை செலுத்தலாம் என்பது இதன் முக்கிய அம்சமாகக் கூறப்படுகிறது. மேலும், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு தடுப்பூசி செலுத்தலாம்?
நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 4 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு QDENGA தடுப்பூசியைச் செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசி இரண்டு தவணைகளில் செலுத்தப்பட வேண்டும்.
நீண்டகால மருத்துவ ஆய்வுகளில் QDENGA தடுப்பூசி நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தை 61 முதல் 80 சதவீதம் வரை குறைக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், டெங்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை சுமார் 84 முதல் 90 சதவீதம் வரை குறைக்கிறது.
தடுப்பூசியின் விலை எவ்வளவு?
QDENGA தடுப்பூசியை இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும். ஒரு தவணையின் விலை சுமார் 6,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வரும் ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் நிலையில் தடுப்பூசியின் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு, இந்தியாவில் QDENGA தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பயாலஜிக்கல் இ நிறுவனத்துடன் டகேடா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுதோறும் 5 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்ய பயாலஜிக்கல் இ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு மூலம் இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் ஆண்டுக்கு 10 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்யும் டகேடா நிறுவனத்தின் உலகளாவிய இலக்கை அடைய உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.