தொகுதி மறுவரையறை.. மக்களவையில் சரமாரி கேள்விகளை முன்வைத்த திமுக எம்பி கனிமொழி!
Kanimozhi Speech In Lok Sabha | மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி அது குறித்து மக்களவையில் பேசியுள்ளார்.
டெல்லி, ஏப்ரல் 17 : மக்களைவில் மூன்று முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றின் மீதான இறுதி வாக்கெடுக்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்க்கட்சிகள் மிக கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், இந்த மசோதாக்கள் கூறித்து திமுக எம்பி கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 3 முக்கிய மசோதாக்கள்
மத்திய அரசு மக்களவையில் மூன்று முக்கிய மசோதக்களை தாக்கல் செய்துள்ளது. அதாவது, 2029 பொதுத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிர்ப்பாக 185 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் இந்த மூன்று மசோதாக்கள் மீது இன்று முழுமையான விவாதம் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தொகுதி மறுவரையறையை எதிர்த்து கனிமொழி எம்.பி பேச்சு
இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறையை எதிர்த்து திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மக்களவையில் பேசிய அவர், 8 கோடி மக்கள் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், நாடாளுமன்றம் அவசரமாக நடத்தப்படுகிறது. தொகுது மறுவரையறை மசோதா இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்க கூடியது. மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கும்போதே, அந்த சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழ் வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




இதையும் படிங்க : “எந்த மாநிலத்தின் உரிமையும் பறிபோகாது”.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் உறுதி!
தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் – கனிமொழி
கடைசியாக வெளியான சென்செக்ஸ் அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மசோதாவில் பிரிவு 4-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தீர்மானிக்கலாமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா தாக்கல்.. தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!
தமிழ்நாடு 11 இடங்களை இழக்கும் – கனிமொழி எம்பி
2011 மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ்நாடு 11 இடங்களை இழக்கும். ஆனால், 50 இடங்கள் கிடைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். எந்த ஆண்டின் மக்கள் தொகையை வைத்து தொகுதி மறுவரையறை என்பதை ஆளும் கட்சியே முடிவு செய்யும் என்று மசோதா கூறுகிறது. தொகுதி மறுவரையறை குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இந்தியாவின் வரைபடத்தை மாற்ற முயற்சி செய்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி கூறியது என்ன?
முன்னதாக நேற்று (ஏப்ரல் 16, 2026) நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்களை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். நாங்கள் இந்தியாவை ஒன்றாக தான் பார்க்கிறோம். தனித்தனி பகுதிகளாக அல்ல. நான் உத்தரவாதம் வழங்குகிறேன் கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை எந்த ஒரு மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்படாது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.