AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“எந்த மாநிலத்தின் உரிமையும் பறிபோகாது”.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் உறுதி!

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகவும், ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால், ஏன் இந்த மாற்றங்கள் முன்னரே செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, சாதாரண மசோதாக்களுடன் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“எந்த மாநிலத்தின் உரிமையும் பறிபோகாது”.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் உறுதி!
அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Apr 2026 14:37 PM IST

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் தற்போதைய 543-லிருந்து 815-ஆக உயர்த்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை (131-வது திருத்தம்) மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்தது. இதில் 33 சதவீத இடங்கள், அதாவது 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்து பேசுகையில், இந்த மாற்றத்தினால் எந்தவொரு மாநிலமோ அல்லது ஆண்களோ பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.

இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா தாக்கல்.. தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!!

815ஆக தொகுதிகள் அதிகரிப்பு:

மக்களவையின் மொத்த பலம் 543-லிருந்து 815-ஆக அதிகரிக்கும். அதிகபட்சமாக 850 இடங்கள் வரை உயர்த்திக் கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது. மொத்தமுள்ள 815 இடங்களில் 272 இடங்கள் (33 சதவீதம்) பெண்களுக்கு ஒதுக்கப்படும். தற்போது மக்களவையில் சுமார் 15 சதவீத பெண் எம்பிக்களே உள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, இந்த 33 சதவீத இடஒதுக்கீட்டிற்குள்ளேயே உள்ஒதுக்கீடு வழங்கப்படும். இதே போன்று மாநிலச் சட்டப்பேரவைகளிலும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்றார்.

ஏன் இந்த விரிவாக்கம்?

2023-இல் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்), மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் இடஒதுக்கீடு அமலாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போதைய மசோதாவின்படி, தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிப்பதன் மூலம், தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்காமலேயே பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க முடியும். இது 2029 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கவலை மற்றும் எதிர்ப்பு:

இந்த மசோதாவிற்குப் பின்னால் உள்ள ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கவலை தெரிவித்துள்ளன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளதாக திமுக எம்பி டி.ஆர். பாலு மற்றும் பிற தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

சாதி வாரி கணக்கெடுப்பு:

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகவும், ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால், ஏன் இந்த மாற்றங்கள் முன்னரே செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, சாதாரண மசோதாக்களுடன் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!

அடுத்த கட்டம் என்ன?

இந்த மசோதா மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதில் சாதி வாரி விவரங்களும் சேகரிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்த நடைமுறைகள் முடிவடைந்தவுடன், 2029 மக்களவைத் தேர்தல் புதிய 815 தொகுதிகளின் அடிப்படையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us