நீட் வினாத்தாள் கசிவு – முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய மசோதா
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவின் மூலம், தேர்வு முறைகேடுகளில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவின் மூலம், தேர்வு முறைகேடுகளில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய மசோதா
நீட் போன்ற மிக முக்கியமான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க, சட்டங்களை மிகவும் கடுமையாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன் படி வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் இதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. சட்டத்தை வலுப்படுத்தவும், வினாத்தாள் கசிவில் ஈடுபடும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார். மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள் மற்றும் விசாரணைகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்; இதற்கென சிறப்பு விரைவு நீதிமன்றங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். திட்டமிட்ட வினாத்தாள் கசிவுச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிப்பதற்கான வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மாநிலங்களுக்கு இடையிலான வினாத்தாள் கசிவு கும்பல்களை முற்றிலுமாக ஒழிப்பதும், அரசுத் தேர்வுகள் மீதான மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதும் இந்த புதிய விதிமுறைகளின் முக்கிய நோக்கமாகும். தற்போது இத்தகைய வழக்குகள் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் நிலையில், இனி சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலம் மூன்று மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை கிடைப்பதையும், தேர்வு நடத்துவதில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், தேர்வுப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் தெளிவாகியுள்ளது.