Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karnataka: ஒருதலைக் காதல்.. கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

Bengaluru Crime News: கர்நாடகா பெங்களூருவில், கல்லூரி மாணவி யாமினி பிரியா ஒருதலை காதலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். காதலை ஏற்க மறுத்ததால், விக்னேஷ் அவரை மிளகாய் பொடி தூவி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka: ஒருதலைக் காதல்.. கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை
Bengaluru Murder
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Oct 2025 07:09 AM IST

பெங்களூரு, அக்டோபர் 18: கர்நாடகா மாநிலத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்கு சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு இப்படி ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராமாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் சுதந்திரபாளையாவில் கோபால் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் உள்ள படவேடு கிராமம் தான் சொந்த ஊராகும். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் குடும்பத்துடன் பெங்களூரு சென்று விட்டார். இந்த நிலையில் இவருக்கு 20 வயதான யாமினி பிரியா என்ற மகள் உள்ளார்.

இவர் பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 16) காலையில் யாமினி பிரியா வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். கல்லூரியில் தேர்வு நடந்த நிலையில் அதனை எழுதிவிட்டு மீண்டும் மதியம் அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது மதியம் 2 மணி அளவில் மல்லேஸ்வரத்தில் உள்ள மந்திரி வணிக வளாகம் பின்பக்கமாக உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே யாமினி பிரியா நடந்து வந்து கொண்டிருந்தார்.

Also Read: வாலாஜா அருகே அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை!

அந்த சமயம் ஒரு இளைஞர் அவரை வழிமுறைத்து தகராறு செய்திருக்கிறார். இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை யாமினி பிரியாவின் கண்ணில் தூவ அவர் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் யாமினி பிரியாவின் கழுத்தில் சராசரியாக அந்த இளைஞர் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த யாமினி பிரியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர கொலையை செய்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பட்டப்பகலில் வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் பல பேர் முன்னிலையில் இந்த கொலை சம்பவம் நடந்த நிலையில், இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதி போலீசார் விரைந்து வந்து மாணவி யாமினி பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

Also Read: தந்தை செய்த கொடூரம்.. 3 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை.. தஞ்சையில் பயங்கரம்!

இந்த விசாரணையில் யாமினியை அவர் வசிக்கும் சுதந்திரபாளையா பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தான் கொலை செய்தது தெரியவந்தது. அவர் இந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் விக்னேஷின் காதலை யாமே ஏற்க மறுத்துவிட்ட நிலையில் அடிக்கடி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக போலீசார்  கண்டறிந்தனர்.

மேலும் இதற்கு முன் வலுக்கட்டாயமாக யாமினி பிரியாவின் கழுத்தில் விக்னேஷ் தாலி கட்ட முயற்சி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. ஆனால் யாமினி பிரியா அவரை வெறுத்ததுடன் காதலையும் ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த விக்னேஷ் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதை நோட்டமிட்டு காத்திருந்த அவர் திட்டமிட்டு கொன்றது தெரிய வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள விக்னேஷை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.