வாலாஜா அருகே அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை!
Ranipet Crime News: ராணிப்பேட்டை மாவட்டத்தில், மனவளர்ச்சி குன்றிய 6 வயது மகனைக் குணப்படுத்த முடியாத விரக்தியில், ஐடி ஊழியர் சுரேந்தர் தனது மகனைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகன் யாஷோவுடன் காணாமல் போன சுரேந்தர், இப்படி ஒரு விபரீத முடிவை தேடியுள்ளார்.

ராணிப்பேட்டை, அக்டோபர் 16: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வயது மகனை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர். 32 வயதான இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுரேந்தர் தனது மனைவி ரம்யா மற்றும் ஆறு வயது மகன் யாஷோ உடன் வசித்து வருகிறார். இதனிடையே அந்த சிறுவனுக்கு மன வளர்ச்சி குன்றி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக சுரேந்தர் மற்றும் ரம்யா தம்பதியினர் பல்வேறு இடங்களிலும் தொடர் சிகிச்சை அளித்தும் எந்தவித முன்னேற்றமும் அடையாமல் இருந்ததால் மிகவும் விரக்தியிலும் கவலையிலும் இருந்து வந்துள்ளனர்.
மகனுடன் காணாமல் போன சுரேந்தர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 14) தனது மகன் யாஷோவை தூக்கிக்கொண்டு சுரேந்தர் வெளியே சென்று விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பதறிப்போன குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடினர். மேலும் சுரேந்தருக்கு தொடர்புடைய நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கும் போன் செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!
ஆனால் அவரைப் பற்றி எந்தவித தகவலும் கிடைக்காததால் அன்றைய இரவில் வாலாஜா காவல்துறையில் ரம்யா புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வாலாஜா போலீசார் சுரேந்தர் மற்றும் ஆறு வயது மகான் யாஷோவை தேடி வந்தனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை எனும் பகுதியில் இருக்கும் வலசை வேணுகோபாலபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இளைஞர் மற்றும் சிறுவன் சடலமாக மிதப்பதாக ஆர்கே பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: கைவிட முடியாத கள்ளக்காதல்.. தற்கொலைக்கு முயன்ற ஜோடி!
தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த இளைஞரின் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை சோதனை செய்த போது அது சுரேந்தர் என்பது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் துரிதமாக அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து சுரேந்தர் மற்றும் மகன் யாஷோ சடலமாக மீட்கப்பட்டதை தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு ரம்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதனர். தொடர்ந்து இருவரின் உடல்களும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த மகனை குணப்படுத்த முடியாததால் அவனை கிணற்றில் வீசி தந்தையும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)