காப்பீடு பணம் ரூ.4 லட்சம்.. கணவருடன் சேர்ந்து அண்ணனை கொன்ற தங்கை!
Coimbatore Crime News: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் பணத்திற்காக அண்ணன் மணிகண்டனை தங்கை அஞ்சு, அவரது கணவர் அஜித்குமாருடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். தாயாரின் விபத்து காப்பீட்டு பணத்தில் மணிகண்டனின் பங்கை அஞ்சு செலவிட்டது தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கோயம்புத்தூர், அக்டோபர் 13: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் பணத்திற்காக அண்ணனை கணவருடன் சேர்ந்து தங்கை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு அஞ்சு மற்றும் தீபா என இரு சகோதரிகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் மணிகண்டனின் தாயார் கடந்த 2024 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் அவர் விபத்து காப்பீடு செய்து இருந்ததால் இழப்பீடாக ரூபாய் 12 லட்சம் வந்துள்ளது. இதனை மணிகண்டன் தனது சகோதரிகள் அஞ்சு மற்றும் தீபா ஆகிய இருவருக்கும் தலா ரூபாய் 4 லட்சம் வழங்கியுள்ளார். தனக்கு வரவேண்டிய பங்கான ரூபாய் 4 லட்சத்தை அஞ்சுவிடம் கொடுத்து பிற்காலத்தில் வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகளை அடித்துக்கொன்ற தாய்.. தானும் தூக்கிட்டு தற்கொலை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!




ஆனால் தனக்கு ரூ.8 லட்சம் வந்துள்ள நிலையில் நிலைகொள்ளாத சந்தோஷத்தில் இருந்த அஞ்சு அதனை தண்ணீராக கணவர் அஜித்குமாருடன் இணைந்து செலவிட்டுள்ளார். தன்னுடைய பணம் மட்டுமல்லாமல் அண்ணன் மணிகண்டனின் பங்கையும் செலவழிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அண்ணன் நம்மிடம் பணத்தைக் கேட்டால் என்ன செய்வது என அஜித்குமார், அஞ்சு ஆகிய இருவரும் யோசித்துள்ளனர். பின்னர் அப்படி ஒரு சூழல் வந்தால் அவரை கொலை செய்யலாம் எனவும் திட்டம் தீட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் தன்னுடைய பணம் தொடர்பாக கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்களது திட்டத்தின் படி அவரை கொலை செய்ய தம்பதியினர் முடிவெடுத்தனர். இதற்கிடையில் சம்பவம் நடந்த நாளன்று அஜித்குமார் மற்றும் அஞ்சு ஆகிய இருவரும் சண்டையிடுவது போல நடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அஞ்சுவை அஜித் குமார் வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து பூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கம்பெனி ஓனர் மனைவியுடன் தொடர்பு.. திருப்பத்தூரில் இளைஞர் கொலை
இது தொடர்பாக அண்ணனுக்கு தகவல் அளித்த நிலையில் மணிகண்டன் தனது தங்கை அஞ்சுவை ஏன் பூட்டி வைத்தீர்கள் என அஜித்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மணிகண்டன் கவனத்தை திசை திருப்பி அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இடுப்பு, முதுகு, தோள்பட்டை ஆகிய இடங்களில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் படுகாயம் அடைந்து வலியால் அலறி துடித்துள்ளார். அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். மணிகண்டன் கத்திக்குத்து காயத்தில் படுகாயம் அடைந்த நிலையில் தன்னுடைய கணவர் அஜித்குமார் மாட்டிக் கொள்வாரோ என்ற பயத்தில் இருந்த அஞ்சு காவல்துறையில் புகார் செய்யாமல் இருந்துள்ளார்.
ஆனால் இந்த விவரம் அறிந்ததும் மணிகண்டனின் மற்றொரு சகோதரியான தீபா மதுக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனை அறிந்து கொண்ட அஞ்சு தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.