ரேஷன் அரிசி கடத்த வற்புறுத்தல்.. லஞ்சம் கேட்ட 4 போலீசார் கைது!
சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்த விவசாயியை கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்ட 4 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி சக்திவேல் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் அனைவரும் பிடிப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், அக்டோபர் 11: சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்த விவசாயியை கட்டாயப்படுத்திய சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டுறவு துறை மூலம் நியாயவிலை கடைகள் வழியாக பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தி விற்பனை செய்யும் சம்பவம் காலம் காலமாக நடந்து வருகிறது. எனினும் இதனை தடுக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநில, மாவட்ட எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து கடும் சோதனைக்குப் பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் விவசாயியாக உள்ளார். இவர் ரேஷன் அரிசி கடத்துவதாக சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு கடந்த மாதம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடந்த சோதனையின் போது ரேஷன் அரிசியுடன் சக்திவேல் கைது செய்யப்பட்டார் இதன் பின்னர் சிறையில் இருந்த அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் விவசாயி சக்திவேல் புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றேன். இதன் பின்னர் ரேஷன் அரிசி கடத்துவதை விட்டுவிட்டேன். ஆனால் காவல் ஆய்வாளர் ராமராஜன், இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் என்னை மீண்டும் அணுகி ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யுமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.




இதையும் படிங்க: குழந்தை திருமணம்.. ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது!
மேலும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாதம் ரூ.15,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துகின்றனர். முதற்கட்டமாக பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். எனக்கு மீண்டும் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்ய விருப்பமில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், காவல் ஆய்வாளர் ராமராஜன், துணை காவல் ஆய்வாளர்கள் சரவணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் விவசாயி மூலம் அந்த ரூ.15 ஆயிரம் யாரிடம் கொடுக்க வேண்டும் என கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: காதலுக்கு மறுப்பு: காதலி வீட்டில் காதலன் விபரீத முடிவா? போலீசார் விசாரணை
அதற்கு ஏட்டாக பணிபுரியும் ராஜலட்சுமியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர் இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் அறிவுறுத்தலின்படி விவசாயி சக்திவேல் பணத்துடன் சேலம் வந்தார். அங்கிருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஏட்டு ராஜலட்சுமியை சந்தித்த அவர் ரூ.15,000 பணத்தைக் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஏட்டு ராஜலட்சுமியை அதிரடியாக கைது செய்தனர்.
அதேசமயம் காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் ராமராஜன், துணை காவல் ஆய்வாளர் சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மற்றொரு குழு மூலம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் கூண்டோடு கைதானதால் அந்த காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் நிலையானது ஏற்பட்டுள்ளது.