கிரிக்கெட் வீரர் பெயரில் இன்ஸ்டா கணக்கு.. பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி!
சென்னையில் பிரபல கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் பெயரில் இன்ஸ்டாகிராமில் ரூ.5 லட்சம் மோசடி செய்த ராகுல் கைது செய்யப்பட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கீதாவிடம் பணம் பறித்துள்ளார். சைபர் கிரைம் காவல்துறையினர் ராகுலை பிடித்து விசாரித்ததில், இவர் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சென்னை, அக்டோபர் 8: பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி இளம்பெண் ஒருவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தொழில்நுட்ப வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் தொடங்கி சாதாரண பயனாளர்கள் வரை போலி சமூக வலைத்தள கணக்குகள் தொடங்கி பணம் பறிக்கும் கும்பலும் செயல்பட்டு வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னையில் நடைபெற்றுள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். 38 வயதான இவருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரராக இருக்கும் பாபா இந்திரஜித் பெயரில் நட்பு அழைப்பு வந்துள்ளது. இதனை கீதா ஏற்றுக்கொண்ட நிலையில் இருவரும் நண்பர்களாக பேசிக்கொண்டு வந்துள்ளனர். நாளடைவில் கீதாவும் எதிர் முனையில் பேசிய நபரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசும் அளவுக்கு இவர்களது நட்பு விரிவடைந்தது.
இதையும் படிங்க: சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி – வீட்டு பணியாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
முதலில் தன்னை பற்றி பெரிதாக காட்டிக் கொள்ளாத எதிர் முனையில் இருந்த அந்த நபர் நாட்கள் சென்ற நிலையில் தான் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் பாபா இந்திரஜித் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த கீதா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்கிடையில் தனக்கு அரசு அதிகாரிகள் பலரையும் தெரியும். நான் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் கிட்டத்தட்ட கூகுள் பே வழியாக 50 முறை பண பரிமாற்றம் செய்ய வைத்துள்ளார். இதன் மூலம் ரூ.5 ,08,700 ரூபாயை எதிர் முனையிலிருந்து பேசிய நபர் பெற்ற நிலையில் அவர் சொன்னபடி எந்த வேலையும் வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கீதாவுக்கு அந்த நபர் மீது பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கீதா தான் கொடுக்க பணத்தைப் பற்றி கேட்டபோது அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் ஐடியை டெலிட் செய்து விட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கீதா சென்னை பெருநகர மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி செய்த நபரின் இன்ஸ்டாகிராம் கணக்கை பெற்றுக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக செயல்பட்டதாக மிரட்டிய கும்பல்.. இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.73 லட்சம் மோசடி.. பகீர் சம்பவம்!
இதில் ராகுல் என்பவர் பாபா இந்திரஜித் படத்தை வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை ஒட்டியம்பாக்கம் காரனை பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்த ராகுலை கடந்த ஜனவரி மாதம் நிறுவனம் பணி நீக்கம் செய்ததால் வீட்டில் பணம் கொடுக்க தேவை இருந்தது,
இதனால் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது அதே சமயம் கடந்த ஏப்ரல் மாதம் ராகுலுக்கு புதுச்சேரியில் இளம்பெண் ஒருவருடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. அதற்கு பணம் தேவைப்பட்டதால் பிரபலங்கள் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணம் மோசடி ஈடுபட்டது தெரிய வந்தது. இதற்கிடையில் ராகுலின் நடவடிக்கை பிடிக்காததால் திருமணம் நடந்த ஒரு மாதத்தில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
அதன் பிறகு ராகுல் மாடலிங் செய்யும் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி இளைஞர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு கோரிக்கை விடுத்து அவர்களிடம் குரலை மாற்றி பேசி பல லட்சம் வரை பணம் பறித்தது தெரிய வந்தது இவர் ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது பெண் தோழி ஒருவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் பயன்படுத்தி இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.