தீரன் பட பாணி.. திருச்சியில் நகை கொள்ளை.. சிக்கிய பவாரியா கும்பல்
திருச்சி அருகே நெடுஞ்சாலையில் மிளகாய் பொடி தூவி நடந்த 10 கிலோ தங்கக் கொள்ளைச் சம்பவத்தில், பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்களை தமிழக போலீசார் கைது செய்தனர். ஓட்டுநரின் சதியுடன் நடந்த இக்கொள்ளை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

திருச்சி, அக்டோபர் 7: திருச்சி அருகே காரில் இருந்தவர்கள் முகத்தில் மிளகாய் பொடி தூவி 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சவுகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே. ஜுவல்லரி என்ற நகைக்கடையின் மேலாளராக பிரதீப் ஷாட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திண்டுக்கல்லில் உள்ள நகை கடைக்கு நகைகளை விற்பதற்காக காரில் இரண்டு ஊழியர்களுடன் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தார். விற்பனைக்கு பிறகு 10 கிலோ நகைகள் மீதமிருந்த நிலையில் அதனை எடுத்துக்கொண்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
நெடுஞ்சாலையில் நடந்த திருட்டு
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இரவு 12 மணியளவில் இவர்கள் பயணித்த கார் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே இருக்கும் கீழவங்காரம் என்ற இடத்தில் சென்ற போது பிரதீப்ஷாட் சிறுநீர் கழிப்பதற்காக காரை ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார். அதிலிருந்து இறங்கி அவர் சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென பின்னால் மற்றொரு காரில் வந்து இறங்கிய நான்கு மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து அங்கிருந்தவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி 10 கிலோ நகையை கொள்ளையடித்தனர்.
Also Read: சென்னை மெட்ரோ ரயிலில் பரபரப்பு; மலேசிய நாட்டு பெண்ணின் பேக்கை திருடிய HR ; அதிர்ச்சி சம்பவம்
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதிப் ஷாட் காரை நோக்கி ஓடிவந்த நிலையில் அவர் மீது மிளகாய் பொடி தூவப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
பவாரியா கும்பல் கைவரிசை
முதலில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் நகைக்காக காரில் பயணப்பட்ட நபர்கள் இந்த வேலையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் கார் ஓட்டுனரான பிரதீப் கான் மீது போலீசாரின் சந்தேக பார்வை திரும்பியது. ஆரம்பத்தில் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த பிரதீப் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார்.
அதன்படி ராஜஸ்தானை சேர்ந்த தனது ஆறு நண்பர்களுடன் இணைந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நபர்கள் இந்தியாவையே அலற வைத்த பவாரியா கொள்ளைக் கும்பலைச் சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பிரதீப் கானியிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் போலீசார் மகாராஷ்டிரா , மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்றனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓடும் பேருந்தில் கைது
ஆனால் திருடப்பட்ட தங்கம் வெவ்வேறு கும்பலுக்கு இடையே கைமாறி விட்டதாக தெரியவந்தது. ஆனால் அது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என கைதானவர்கள் தெரிவித்ததால் போலீசார் ரகசியமாக விசாரணையைத் தொடந்தனர். இந்த நிலையில் திருடப்பட்ட நகைகள் அனைத்தும் ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த மங்கிலால் தேவாசி மற்றும் விக்ரம் ஜாட் ஆகிய இருவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பின்னர் அவர்களின் மொபைல் எண்களை வாங்கி கண்காணித்த தனிப்படை போலீசார் இருவரும் மும்பை – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை கண்டறிந்தனர். உடனடியாக தமிழக காவல்துறையினர் சாண்ட்னர் காவல்துறை உதவியை நாடினார். இரு மாநில காவல் துறையினரும் இணைந்து மத்திய பிரதேசத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 9.432 கிலோ தங்க நகைகள் ரூபாய் 3 லட்சம் பணம், 2 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட இருவரையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.