Crime: டெலிவரி பாய் வேடம்.. தொடர் திருட்டு.. சென்னையில் இருவர் கைது!
Chennai Robbers Arrest: சென்னையில் டெலிவரி பாய் போல வேடமிட்டு பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 32 சவரன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் சிக்கிய இக்கும்பல், சென்னையின் பல பகுதிகளில் இதே பாணியில் கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, அக்டோபர் 6: சென்னையில் டெலிவரி பாய் போல வேடம் அணிந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இருக்கும் புஜங்காரா வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் இரண்டாவது தளத்தில் தியாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவர் கடந்த 2025 செப்டம்பர் எட்டாம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் இருக்கும் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக இது குறித்து தியாகராஜன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அதன்படி அந்த காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் தியாகராஜன் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது அருகில் இருக்கும் பகுதிகளில் பொருத்தப்பட்டிருண்ட்ய்ஹ சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாம் முகமது மற்றும் நூர் இஸ்லாம் ஆகிய இருவரும் டெலிவரி பாய்போல வந்து ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, “கைது செய்யப்பட்டுள்ள ஷாம் முகமது மற்றும் நூர் இஸ்லாம் ஆகிய இருவரும் உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து சென்னை வந்து சென்ட்ரலில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துள்ளனர்.
Also Read: பகலில் யூடியூபில் போதனை வீடியோ.. இரவில் பலே திருடன்.. வசமாக சிக்கிய மோடிவேஷனல் ஸ்பீக்கர் !
இவர்கள் சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் டெலிவரி பாய் போல செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அங்கு பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தங்கள் கொள்ளைக்கு தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதும், பின்னர் ஆட்கள் சென்ற பிறகு அந்த வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடுவதும் தெரிய வந்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் ஷா முகம்து மீது மட்டும் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியானது நடந்து வருகிறது.