Trichy: மனைவியுடன் தகராறு.. ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை
Tiruchirappalli Crime News: திருச்சி அரியமங்கலத்தில் ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான தந்தை, பூக்கடை வியாபாரி ஷாகுல் உதவியுடன் குழந்தையை விற்றுள்ளார்.குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, அக்டோபர் 4: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் பணத்திற்காக பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தந்தை உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். ரவிக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருக்கும் நிலையில் அவரது மனைவி சித்தாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே ரவிக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்துள்ளது.
குழந்தையுடன் வெளியில் தங்கிய ரவிக்குமார்
அப்படியாக சமீபத்தில் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டபோது தனது மூன்று வயது மகளை வெளியே அழைத்து சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் ரவிக்குமார் தங்க வைத்துள்ளார். இதன் பின்னர் மனைவியுடன் சமாதானம் ஏற்பட்டு தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வழக்கம் போல மது அருந்தும் பழக்கத்தால் மனைவியுடன் ரவிக்குமாருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கம்பெனி ஓனர் மனைவியுடன் தொடர்பு.. திருப்பத்தூரில் இளைஞர் கொலை
இதனால் குழந்தையை வழக்கம்போல அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்ற அவர் நீண்ட நாட்களாக வீட்டிற்கு திரும்ப வரவில்லை. குழந்தை எங்கே என்பது குறித்து கணவரிடம் மனைவி கேட்டபோது நண்பர் வீட்டில் குழந்தை தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரவிக்குமார் கூறிய நண்பரான பூக்கடை ஷாகுலிடம் சென்று தனது குழந்தை பற்றி அந்த பெண் விசாரித்துள்ளார். அப்போது ஷாகுல் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
குழந்தையை விற்ற அவலம்
அதாவது உங்களது மகள் என்னிடம் இல்லை. நீங்கள் குழந்தையை வளர்க்க கஷ்டப்படுகிறீர்கள் என ரவிக்குமார் சொன்னான். மேலும் உங்கள் நடத்தை மீது அவருக்கு சந்தேகம் உள்ளது. எனவே குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுக்கும்படி கூறியதால் இன்னொரு தம்பதியினருக்கு கொடுத்து விட்டேன் என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிக்குமாரின் மனைவி அரியமங்கலம் காவல்துறையில் புகாரளித்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த முருகன் – சண்முகவள்ளி தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க நினைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலியை மிரட்ட தற்கொலை செய்வதுபோல நடித்த இளைஞர் உயிரிழப்பு!
அப்போது ரவிக்குமாரின் குழந்தையை ஷாகுல் ஐம்பதாயிரம் பணத்திற்காக விற்றுள்ளது தெரிய வந்தது. இதில் ரூ.15 ஆயிரம் ரவிக்குமாருக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ரவிக்குமார் காவல்துறையினரிடம் தனக்கு ரூ. 15,000 பணம் கொடுக்கப்படவில்லை என்றும், தினமும் மது அருந்துவதற்கு சாகுல் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் முருகன் – சண்முகவள்ளி தம்பதியினர் அந்த குழந்தையை நன்கு பராமரித்து வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து குழந்தையை விட்டு போலீசார் தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் சட்ட விரோதமாக குழந்தையை பணத்திற்கு விற்றதாக பூக்கடை ஷாகுல், ரவிக்குமார் மற்றும் தத்தெடுத்த தம்பதியினர் முருகன் – சண்முக வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.