வரிசையில் நிற்க சொன்னது குத்தமா? – ஊழியரை தாக்கிய சட்ட மாணவி கைது
Trichy Crime News: திருச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வரிசையில் நிற்க மறுத்த சட்டக்கல்லூரி மாணவி கிரிஜா, ஊழியரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனையடுத்து, கிரிஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

திருச்சிராப்பள்ளி, அக்டோபர் 2: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்கேன் எடுக்கும் இடத்தில் வரிசையில் நிற்க சொன்ன ஊழியரை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளை சொல்லி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்த மாணவி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. திருச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பலதரப்பட்ட மக்கள் வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனை என்பதால் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் உடல்நல பாதிப்புகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வரும் நபர்கள் காத்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம்.
காத்திருக்க மறுத்த மாணவி
இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் இடத்தில் டெக்னீசியனாக வில்லியம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தார். சரஸ்வதி பூஜை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது திருச்சி மாவட்ட அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் கிரிஜா என்ற மாணவி தனது உறவினர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அங்கு அழைத்து வந்துள்ளார்.
Also Read: பழிக்கு பழி சம்பவம்.. இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்.. நெல்லையில் பயங்கரம்!
ஸ்கேன் எடுக்கும் இடத்தில் ஏற்கனவே கூட்டம் இருந்ததால் முறைப்படி பதிவு செய்யப்பட்டு மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். ஆனால் தன்னுடைய உறவினருக்கு உடனே ஸ்கேன் எடுக்குமாறு வில்லியமிடம் கிரிஜா வலியுறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் காத்திருக்கும் நிலையில் வரிசைப்படி தான் ஸ்கேன் எடுக்க முடியும் எனவே வரிசையில் வாருங்கள் எனக் கூறியுள்ளார்.
தகாத வார்த்தை – ஊழியர் மீது தாக்குதல்
இதனை கேட்டு ஆத்திரமடைந்த சட்டக் கல்லூரி மாணவி கிரிஜா வில்லியமை சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். இதனால் கோபமடைந்த வில்லியமும் பதிலுக்கு கிரிஜாவை திட்டி தீர்த்தார். ஆனாலும் கிரிஜா விடாப்பிடியாக வில்லியமை காலால் எட்டி உதைப்பதும், நெஞ்சில் கை வைத்து தள்ளுவதும் என ருத்ர தாண்டவம் ஆடினார்.
இதனைக் கண்டு அரசு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களும், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கிரிஜாவை சமாதானப்படுத்த முயன்ற முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
Also Read: தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை.. விசாரணையில் ட்விஸ்ட்!
அதனை அடிப்படையாகக் கொண்டு வில்லியம் கொடுத்த புகாரின் பேரில் மகாத்மா காந்தி மருத்துவமனை காவல் நிலைய போலீசார், பணியில் இருந்த ஊழியரை தாக்கிய கிரிஜா மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஏற்கனவே திருச்சி மாவட்ட காவலர்களை சட்டக் கல்லூரி மாணவி என்ற போர்வையில் கிரிஜா மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னதாக ஒரு முறை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.