Crime: ஒன்னா, ரெண்டா.. ஊரையே ஏமாற்றிய 13 பேர் கொண்ட கும்பல்!
ராஜஸ்தானில் ஹேம்ராஜ் சுமன் தலைமையிலான 13 பேர் கொண்ட மோசடி கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு மோசடி, போலி பாலியல் தொல்லை மிரட்டுதல், வாகன ஆவண மோசடி உள்ளிட்ட பன்முக குற்றச் செயல்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் சுருட்டிய இக்கும்பலை ஜலாவர் காவல்துறையினர் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் பிடித்துள்ளனர்.

ராஜஸ்தான், அக்டோபர் 1: ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட 13 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் ஒரே மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடாமல் பல வழிகளில் பலரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளனர். பல மாத தேடுதல் வேட்டைக்குப் பின் ஜலாவர் காவல்துறை இந்த கும்பலை கைது செய்துள்ளனர். இவர்கள் செய்த சம்பவங்களைக் கேட்டால் தலையே சுற்றி விடும் என சொல்லலாம். ஹேம்ராஜ் சுமன் கும்பல் என அழைக்கப்படும் இந்த 13 பேர் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பது பற்றிக் காணலாம்.
காப்பீட்டு மோசடி செய்வது இவர்களின் முதன்மை குற்றமாகும். அதாவது ஏழை விவசாயிகளிடம் பேசி அவர்களின் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி கொடுப்பார்கள். பின்னர் கடனை தரவில்லை என அவர்களிடமிருந்த டிராக்டர்கள் மற்றும் பெரிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து அந்தக் கும்பல் வாகனங்களை விற்பனை செய்வார்கள். மறுபுறம் வாகனங்கள் காணாமல் போனதாக திருட்டு வழக்குகளைப் பதிவு செய்து காப்பீட்டு நிறுவனங்களை லட்சக்கணக்கில் பணம் பெறுவார்கள்.
Also Read: டிஜிட்டல் கைது என கூறி மோசடி.. முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.23 கோடி கொள்ளையடித்த கும்பல்!
அடுத்ததாக பெண்ணை கொண்டு செல்வாக்கு மிக்க நபர்களை தங்கள் வலைகளில் சிக்க வைப்பார்கள். போலீஸ் சீருடைகளில் அங்கு வந்து ஆயுதங்கள் காட்டி மிரட்டி பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுப்போம் என அச்சுறுத்துவார்கள். இதன் மூலம் பெரும் தொகையைப் பறிப்பார்கள். இதுமட்டுமல்லாமல் வாகன ஆவணங்களை மோசடி செய்து அவற்றை விற்பனை செய்தல், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்துதல், போலி எண் தகடுகளை வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாகனங்களைப் பயன்படுத்துதல் என பல குற்றச் செயல்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தாலும் குற்றவாளிகளை நெருங்க முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி, கோட்வாலியின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அமித் குமாரிடம் ரகசிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி, சரோலா காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஹேம்ராஜ் சுமன், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவரது கூட்டாளிகள் மேற்கண்ட சட்டவிரோத வேலையைச் செய்து வருவது தெரிய வந்தது. காவல்துறை அவர்களை பிடிக்க திட்டம் தீட்டியது.
Also Read: பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருட்டு.. டீ குடிக்க இறங்கியபோது சம்பவம்!
இதனையடுத்து எஸ்பி குமார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிரஞ்சிலால் மீனா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், சுமார் 20 குழுக்கள் ஒரே நேரத்தில் ஜலவார், ஜலராபதன், சரோலா மற்றும் கோட்டா ஆகிய இடங்களில் சோதனை நடத்தி இந்த கும்பலை தட்டி தூக்கியுள்ளனர். அவர்களின் வீட்டைச் சோதனை செய்தபோது, பல வங்கிகளின் பாஸ்புக் மற்றும் காசோலைப் புத்தகங்கள், பல வாகனங்களின் அசல் ஆவணங்கள், சொத்து பத்திரம் மற்றும் விற்பனை தொடர்பான முத்திரை தாள்கள், ஒப்பந்தங்கள் மற்றும் 06 வெவ்வேறு வாகனங்களின் எண் கொண்ட தகடுகள் மீட்கப்பட்டன.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், ஜலாவர், பரன், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குற்றச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.