Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. வேலை நாளில் பள்ளிக்கு விடுமுறை விட்ட அதிகாரிகள்

Ungaludan Stalin Camp: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாமிற்காக அரசு நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள், கடைசி நேர அழுத்தம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. வேலை நாளில் பள்ளிக்கு விடுமுறை விட்ட அதிகாரிகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 09 Sep 2025 17:23 PM IST

திருச்சி, செப்டம்பர் 9: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளி ஒன்றிற்கு விடுமுறை விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை அறிவித்தார். இந்த முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. இதில் அரசின் பலதுறை சார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அதனை பரிசீலித்து குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமானது நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகளில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் என அமலில் உள்ளது.

பள்ளிக்கு விடுமுறை

இப்படியான நிலையில் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டியில் செயல்படும் நூற்றாண்டு பழமையான அரசு நடுநிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்க்கும் முகாமை நடத்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அந்த பள்ளியில் அரசின் நிகழ்வுகளுக்காக பள்ளி செயல்படுவதை நிறுத்திய இந்த முடிவு உள்ளூர் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கல்வி நேரத்தை எந்த விஷயத்திலும் சமரசம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை முதல் ரேஷன் கார்டு வரை.. அனைத்து சேவைகளும் கிடைக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

திருச்சியில் உள்ள சிபிஐ செயல்பாட்டாளர் இப்ராஹிம் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பள்ளி வளாகத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. திமுக அரசு கல்விக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறுகிறது, ஆனால் குழந்தைகளின் கற்றல் நேரம் அரசியல் விஷயத்துக்காக தியாகம் செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக சமூக அரங்குகள் அல்லது தற்காலிக கூடாரங்கள் போன்ற இடங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

கடைசி நிமிட அழுத்தம்

ஆனால் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளூர் விடுமுறை அறிவிக்க அனுமதி கோரியதாகவும், முறையான ஒப்புதல் அளிக்கப்படாமலே விடுமுறை விடப்பட்டதாகவும் அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். கடைசி நிமிட அழுத்தம் காரணமாக, நாங்கள் விடுமுறை அறிவிக்க வேண்டியிருந்தது என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பதன் மூலம் இழந்த நாளை ஈடுசெய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த காலங்களில் கல்வி அட்டவணைகள் சீர்குலைவதைத் தடுக்க பல தொகுதிகளில் இதே போன்ற திட்டங்கள் நடப்பது தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஊரை ஏமாற்றும் திட்டம்” – இபிஎஸ், தமிழிசை விமர்சனம்

மாற்று இடங்கள் தேர்வு செய்யப்படாமல் இருப்பது குறித்து கேள்வியெழுப்பிய நிலையில் ​​பொதுமக்களுக்கு எளிதாக அணுக வேண்டி பள்ளி வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.