ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்.. அஸ்தியை கரைப்பது போல் கிடக்கிறது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
Ungaludan Stalin Petition: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் மூலம் அரசு துறை சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருபுவனத்தில் வைகையாற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருபுவனம், ஆகஸ்ட் 29, 2025: “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருபுவனம் வைகை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் முகாம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் என்பது அரசு துறை சேவைகளை அந்தந்த வார்டுகளில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் தாசில்தார் கையொப்பத்துடன் இருந்த பொதுமக்கள் மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: வெண்டிலேட்டர் சிகிச்சையில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் சொன்னது என்ன?
ஆற்றில் வீசப்பட்ட மனுக்கள் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள்,
இன்று சிவகங்கை, திருப்புவனம்
வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு ,
எனது கடும் கண்டனங்கள்.எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக… pic.twitter.com/tfOiu35fXa
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 29, 2025
இந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர், “எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள் கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளன; சாவி கூட காணவில்லை.
Also Read: தவெக கூட்டணிக்கு நோவா? பிரேமலதா சொன்ன முக்கிய பாயிண்ட்.. விஜய்க்கு அட்வைஸ்
‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள், இன்று அஸ்தியை கரைப்பது போல் திருபுவனம் வைகை ஆற்றில் குப்பையாக்கப்பட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்கு உரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்:
இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி, பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில், மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டதற்கு யார் காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதற்காக உரிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான தகவலின்படி, 2025 ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் பெறப்பட்ட மனுக்களே ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.