Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலியை மிரட்ட தற்கொலை செய்வதுபோல நடித்த இளைஞர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே ஜெய்சங்கரன் என்ற இளைஞர், காதலியுடன் வாக்குவாதத்தின்போது தற்கொலை செய்யப்போவதாக நாடகமாடியுள்ளார். அதன்படி போர்வை கொண்டு தூக்கில் தொங்கும்படி நடித்தார். ஆனால், இறுதியில் போர்வை அவரது கழுத்தில் இறுகி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.காதலியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

காதலியை மிரட்ட தற்கொலை செய்வதுபோல நடித்த இளைஞர் உயிரிழப்பு!
ஜெய்சங்கரன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Sep 2025 08:11 AM IST

கன்னியாகுமரி, செப்டம்பர் 17கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விளையாட்டாக தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய இளைஞர், உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை அடுத்துள்ள நித்திரவிளை அருகே ரவிபுத்தன்துறை என்ற பகுதியுள்ளது. இங்கு ஜெயக்குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 23 வயதான ஜெய்சங்கரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஜெய்சங்கரன் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துவிட்டு மேற்படிப்பில் சேர்வதற்காக இருந்துள்ளார்.

காதலியுடன் தகராறு

இந்த நிலையில் ஜெய்சங்கரனும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர், இதற்கிடையில் ஜெய்சங்கரன் தினமும் காதலியுடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தாலும் பின்னர் சமாதானமாகி சென்று விடுவதும் இருந்து வந்துள்ளது.

Also Read:  கணவர் மரணம்.. துக்கம் தாங்காமல் மனைவி, குழந்தையுடன் தற்கொலை

இப்படியான நிலையில் நேற்று (செப்டம்பர் 16) மதியம் ஜெய்சங்கர் தனது காதலியுடன் வாட்ஸ்அப் செயலி வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் நடந்த உரையாடல் ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலியை மிரட்ட முடிவு செய்த ஜெய்சங்கரன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வினையானது

வீடியோ காலில் தனது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் போர்வையால் தூக்கு போட்டு தொங்கும்படி நடித்தார். இதனைக் கண்டு அவரது காதலி பதறி சமாதனம் ஆவார் என ஜெய்சங்கரன் நினைத்துள்ளார்.  ஆனால் திடீரென போர்வை கழுத்தில் இறுகியதால் அவர் உயிருக்கு போராடினார்.  அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் கீழே இருந்த ஜெய்சங்கரின் தாயார் ஓடி வந்து அறையின் கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியாததால் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

உடனடியாக ஓடி வந்த அக்கம்பக்கத்தின கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் அதற்குள் ஜெய்சங்கரன் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியழுதனர். பின்னர் இது பற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read: சினிமாவுக்கு ஆழைத்து செல்லாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளம்பெண்..

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காதலியிடம் நடத்திய விசாரணையில் அவர் நடந்த சம்பவங்களை கூறிய போது தான் விளையாட்டாக செய்ய நினைத்தது வினையாக மாறி ஒரு உயிரைப் பறித்தது தெரியவந்துள்ளது.

(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)