பிரேக் அப் செய்த காதலி.. ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்திய இளைஞர்.. செங்கல்பட்டில் ஷாக்
Chengalpattu Crime News : செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னாள் காதலி மற்றும் அவரது நண்பரை கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இளைஞர் தாக்கிவிட்டு சென்றிருக்கிறார். இதனை அடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு, அக்டோபர் 04 : செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் முன்னாள் காதலியை இளைஞர் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் காதலனையும் இளைஞர் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை, கொலை சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, காதல் விவகாரத்தில் பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்று சம்பவங்களை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இருப்பினும், தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், சென்னை அடுத்த மேல்மருவத்தூரில் முன்னாள் காதலியை இளைஞர் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஆன்லைனில் ஃப்ரி ஃபயர் என்ற மொபையில் கேம் விளையாடும்போது, ஒரு பெண்ணுடன் அறிமுகமானார். இருவரும் எண்களை பகிர்ந்து கொண்டு பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் கடந்த சில மாதங்களாக காதலித்து வருகின்றனர். 2025 அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று மேல்மருவத்தூரில் உள்ள தனது காதலியை சந்திக்க சரவணன் அங்கு சென்றார். அங்கு இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் இருவரையும் கத்திரிக்கோலால் குத்தியுள்ளனர்.
Also Read : தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்துக்கு தடை.. மக்களே உஷார்!
காதலியை கத்திரிக்கோலால் குத்திய இளைஞர்
இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தலைமறைவாக இருந்த இளைஞரையும் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் விசாரணையும் நடத்தினர். அதன்படி, கைதான இளைஞர் எழிலரசன் (22) என்பது தெரியவந்தது. இவர் அந்த பெண்ணிடம் ஆன்லைன் கேம் மூலம் அறிமுகமானார். இருவரும் காதலித்து வந்த நிலையில், சரவணனுடன் பேசியதில் இருந்து அந்த பெண் எழிலரசனுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். மேலும், எழிலரசனுடன் கேம் விளையாடுவதை அவர் நிறுத்திவிட்டார்.
Also Read : சென்னையில் பரபரப்பு.. மு.க.ஸ்டாலின், த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இதானல், அவரிடம் பலமுறை சண்டையிட்டு, தன்னை காதலிக்குமாறு கூறியிருக்கிறார். இருப்பினும், அந்த பெண் எழிலரசனை தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த எழிலரசன், பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.