தவெகவினர் மிரட்டல்? – விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை
நாகப்பட்டினத்தில் விஜய் கைது நடவடிக்கை தொடர்பான போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலை கண்டித்து போஸ்டர் ஒட்டியவரை தவெக நிர்வாகிகள் மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

நாகப்பட்டினம், அக்டோபர் 2: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் மிகவும் தாமதமாக அந்த கூட்டத்திற்கு வந்த நிலையில் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவை ஒலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த சோக சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சிகளும், விஜய் தான் முழு பொறுப்பு என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் விஜயை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 28ஆம் தேதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.
Also Read: விஜய் வீட்டில் நுழைந்த மர்ம நபர்.. ஷாக்கான காவலர்கள்- நடந்தது என்ன?
நாகையில் நடந்த சம்பவம்
இதில் நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தின் முக்கிய சுவர்களில் கரூர் சம்பவத்தை கண்டித்தும், விஜய்யை கைது செய்ய கோரியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் சுவரொட்டிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனை ஒட்டிக்கொண்டிருந்த நபரை பிடித்து யார் உங்களை இதை ஒட்ட சொன்னது என கேள்வி கேட்டு வீடியோ எடுத்ததுடன் தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சுவரொட்டி ஒட்டிய தன்னை மிரட்டியதாக வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது கீழையூர் காவல் நிலையத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இப்படியான நிலையில் பரத்வாஜ் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கீற்றுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளாங்கண்ணி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read: ‘செந்தில் பாலாஜி தான் காரணம்’ விஜய் தொண்டர் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!
இந்த நிலையில் பரத்வாஜை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதாக கீழையூர் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் திவாகர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகிகள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை பிடிக்க நாகை டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரத்வாஜ் அளித்த புகார் மீது கீழையூர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)