‘செந்தில் பாலாஜி தான் காரணம்’ விஜய் தொண்டர் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!
TVK Cadre Suicide In Villupuram : விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தவெக தொண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விழுப்புரம், செப்டம்பர் 30 : விழுப்புரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆதங்கமாக கடிதம் எழுதி வைத்திவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் சேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கரூர் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருந்தாலும், இதுகுறித்து உண்மை நிலை முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும். மேலும், தவெகவினர் சோஷியல் மீடியாவில் திமுக தான் இதற்கு முழு பொறுப்பு என குற்றச்சாட்டி வருகின்றனர். திமுகவினரோ இதற்கு தவெக தான் காரணம் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விற்பட்டு தவெக கிளை நிர்வாகியாக இருந்தவர் அய்யப்பன். இவர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் கரூர் சம்பவத்தை மனவேதனையுடன் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Also Read : கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுதான்… யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி




விஜய் தொண்டர் எடுத்த விபரீத முடிவு
இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அய்யப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அவரது அறையில் இருந்த கடிதத்தையும் மீட்டனர். அக்கடித்தத்தில், “கரூர் மாவட்டத்தில் விஜய் வருகையின்போது போதிய பாதுகாப்பு இல்லை. அதில் விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள்.
Also Read : கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி – 25 சமூக வலைதள கணக்கு மீது வழக்குப்பதிவு
ஆனால் நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது. இந்த துயர சம்பவத்திற்கு அவர் தான் காரணம். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது உண்மையிலேயே கரூர் சம்பவம் காரணமாக நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)