சென்னையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – டிரைவர் உட்பட 8 பேர் காயம்
Bus Accident : சென்னை வேளச்சேரியில் செப்டம்பர் 22, 2025 அன்று அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த நபர்களை உடனடியாக ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பார்க்கலாம்.

சென்னை, செப்டம்பர் 22 : சென்னையில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகே செப்டம்பர் 22, 2025 அன்று காலை இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் (Accident), பேருந்தின் டிரைவர் உட்பட 8 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 22, 2025 காலை சுமார் 7 மணியளவில், சைதாப்பேட்டையில் இருந்து கொளத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கொளத்தூரில் இருந்து தியாகராயநகர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், தண்டீஸ்வரம் கோவிலுக்கு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சிதைந்தது. இந்த விபத்தில் டிரைவர் அன்பழகன் மற்றும் பயணிகள் பாண்டியன், தினகரன், விமலா, சசிகலா உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.. பாலியல் தொல்லையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்!




போக்குவரத்து பாதிப்பு
விபத்து நடந்ததும் அந்தப் பகுதியில் பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பரபரப்பான காலை நேரத்தில் இந்த விபத்து நடைபெற்ற காரணத்தால், வேளச்சேரி சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விபத்து நடந்த இடம் சாலைகள் வளைவாக உள்ள பகுதி என்பதால், அதிக வேகத்தில் வந்த இரண்டு பேருந்துகளும் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், குறுகிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் சீரற்ற முறையில் நிறுத்தப்பட்டிருந்ததும் விபத்துக்கு காரணம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த உடனே, அய்யர்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேருந்துகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்துக்கு தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : பாம்பன் பாலத்தில் அதிர்ச்சி.. திடீரென ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்.. நடந்தது என்ன?
சாலையில் இருந்த பள்ளத்தால் பறிபோன உயிர்
இதே போல கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் மாநகர பேருந்து ஓட்டுநரான முருகேசன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, சாலையில் உள்ள பள்ளத்தை கவனித்தார். பள்ளத்தை கடக்க நினைத்து வேகத்தை குறைத்தபோது, பின்னர் வந்த மற்றொரு இருசக்கர வாகன ஓட்டுநர் அவரின் வாகனத்தை மோதினார். அப்போது நிலைதடுமாறி முருகேசன் வாகனத்திலிருந்து விழுந்தார். இந்த நிலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. அன்று அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சென்னை-ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.