பள்ளி மாணவிகள் கர்ப்பம்.. தூத்துக்குடி, குமரியில் அதிர்ச்சி சம்பவம்!
கன்னியாகுமரி, தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் கர்ப்பமான சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடியில் கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரியில் காரணமானவர் குறித்து விசாரணை நடக்கிறது. இச்சம்பவங்கள் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்த தீவிர கவலைகளை எழுப்பியுள்ளன.

தமிழ்நாடு, அக்டோபர் 6: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாக இருந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரே ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கொங்கராய குறிச்சி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்தப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை இவர் ஆசை வார்த்தைகள் பேசி பாலியல் வன்கொடுமை செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது. இப்படியான நிலையில் உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாணவி பாதிக்கப்பட்ட நிலையில் அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.
Also Read: பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 9 ஆம் வகுப்பு சிறுமி.. 28 வயது இளைஞரை வலைவீசி தேடும் போலீஸ்!




அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர். மாணவி தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் கவுன்சிலிங் கொடுக்கும் பணியும் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நடந்த சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கருங்கல் அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை 2012 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயாரை பார்ப்பதற்காக நாகர்கோவிலுக்கு வந்துள்ளார்.
இப்படியான நிலையில் தனக்கு வயிறு வலிப்பதாக அந்த மாணவி கூற மகளை தாயார் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.
Also Read: கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுமி பெற்றெடுத்த குழந்தை: காதலனுக்கு வலைவீச்சு
உடனடியாக மருத்துவர்கள் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் யார் என மாணவி பதில் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார்.
இதன் பின்னர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பாட்டி வீட்டில் தங்கி இருந்த மாணவிக்கு இந்த சம்பவம் நடந்ததால் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு சம்பவங்கள் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.